Published : 16 May 2021 09:04 PM
Last Updated : 16 May 2021 09:04 PM
கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக மாற்றப்பட்டதற்கு ஏற்ப கோவின் இணையளம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு செல்லுபடியாகும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்தி சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது
கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் 2வது டோஸ்களுக்கான இடைவெளியை 12-16 வாரங்களாக நீட்டிக்கும்படி டாக்டர் என்.கே.அரோரா தலைமையிலான கோவிட் நிபுணர் குழு பரிந்துரைத்தது. இதை மத்திய அரசு கடந்த 13-ம் தேதி ஏற்றுக் கொண்டது.
இந்த மாற்றத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இந்த அதிகரிக்கப்பட்ட இடைவெளிக்கு ஏற்ப கோவின் இணையதளமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட, கோவின் இணையளத்தில் 84 நாட்கள் இடைவெளிக்கு குறைவாக முன்பதிவு செய்தவர்கள், தடுப்பூசி போடப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
தற்போது, கோவின் இணையதளத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது தெளிவுபடுத்தப் படுகிறது.
இதன் காரணமாக, இனிமேல் ஆன்லைன் மூலம் இரண்டாவது டோஸ் கோவிஷீல்டு தடுப்புசி போட்டுக்கொள்வதற்கு பயனாளிகள் 84 நாட்களுக்கு குறைவாக முன்பதிவு செய்ய முடியாது.
மேலும், 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, ஆன்லைன் மூலம் ஏற்கெனவே செய்யப்பட்ட முன்பதிவுகளும் செல்லுபடியாகும். அவற்றை கோவின் இணையளம் ரத்து செய்யவில்லை. மேலும், பயனாளிகள், தங்கள் முன்பதிவு தேதியை முதல் டோஸ் போட்ட தேதியிலிருந்து, 84 நாட்களுக்குப்பின் தேதியில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த மாற்றத்துக்கு முன்பாக, கோவிஷீல்டு 2வது டோஸ் ஊசிக்கு ஆன்லைன் மூலம் செய்யப்பட்ட முன்பதிவை மதிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே முன்பதிவு செய்த பயனாளிகள், 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட வந்தால், அவர்களை திருப்பி அனுப்ப கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தும்படி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்த மாற்றம் தொடர்பாக, பயனாளிகளுக்கு தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT