Published : 16 May 2021 08:13 PM
Last Updated : 16 May 2021 08:13 PM
உணவு தானியங்களை உரிய காலத்தில் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக நியாயவிலைக் கடைகள் இயங்கும் நேரத்தை நீட்டிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
ஒரு சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பொது முடக்கத்தால் நியாயவிலைக் கடைகளின் இயக்கம் பாதிக்கப்படலாம் என்பதால், பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா III மற்றும் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவு தானியங்களை கோவிட்-19 நெறிமுறைகளைக் கடைப்பிடித்து சமூக இடைவெளியுடன் வழங்குவதற்கு ஏதுவாக மாதத்தின் அனைத்து நாட்களிலும் நியாய விலைக் கடைகளை இயங்கச் செய்யலாம் என்று மே 15 அன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
இதைக் கடைபிடிப்பதற்காக, கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு விலக்கு அளிக்குமாறும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் காரணமாக அனைத்து பயனாளிகளுக்கும் பாதுகாப்பாகவும், உரிய காலத்திலும், கோவிட்-19 நெறிமுறைகளுக்கு உட்பட்ட வகையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய முடியுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு தானியங்களை உரிய காலத்தில், பயனாளிகளுக்கு சிரமம் ஏற்படாமல் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மேற்கொள்ளுமாறும், இது தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து பரவலாக விளம்பரப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT