Last Updated : 16 May, 2021 12:46 PM

 

Published : 16 May 2021 12:46 PM
Last Updated : 16 May 2021 12:46 PM

கரோனாவிலிருந்து குணமடைந்த காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவ் உயிரிழப்பு: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவ் | படம் உதவி ட்வி்ட்டர்

புனே


கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சாதவ் இன்று காலமானார். அவருக்கு வயது 46.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் சாதவ், புனேநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை எடுத்துவந்தார். கரோனாவிலிருந்து மீண்டு குணமடைந்த நிலையில் கரோனாவுக்கு பிந்தைய உடல்உபாதைகளால் அவதிப்பட்டு வந்தநிலையில் ராஜீவ் இன்று காலமானார்.

இது குறித்து மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் இன்று நிருபர்களிடம் கூறுகையில் “ கரோனாவிலிருந்து ராஜீவ் சாதவ் குணமடைந்துவிட்டார். அவருக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியி்ன் அளவு குறைவாக இருந்ததால், ஸ்பான்டிலிட்டிஸ் அதாவது முதுகுதண்டுவடத்தில் பிரச்சினையால் மருந்து, மாத்திரை எடுத்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல் நிமோனியா காய்ச்சலும், உடலுறுப்புகள் சரியாக செயல்படாத நிலையில் ராஜீவ் சிகிச்சை பெற்று வந்தா். அதன்பின் பாக்டீரியா தொற்றுக்கும் ஆளாகி, நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி செய்தபோதிலும் ராஜீவ் சாதவ் உயிரை காப்பாற்ற முடியவி்ல்லை” எனத் தெரிவித்தார்.

கடந்த மாதம் 22ம் தேதி ராஜீவ் சாதவ் கரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் சாதவ் மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ என்னுடைய நண்பர் ராஜீவ் சாதவ் மறைவால் நான் மிகவும் வேதனையில் வாடுகிறேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை உள்ளடக்கி, அதிக திறமையுள்ள சிறந்த தலைவர். ராஜீவ் மறைவு அனைவருக்கும் பெரும் இழப்பு. ராஜீவ் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ என்னுடைய நாடாளுமன்ற நண்பர் ராஜீவ் சாதவ் மறைவு செய்தியால் வேதனையப்படுகிறேன். அதிகமான திறமையுள்ள, வளர்ந்து வரும் அரசியல் தலைவராக ராஜீவ் இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். ஓம் சாந்தி “ எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் ஹங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீவ் சாதவ், ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக இருந்தார். குஜராத் மாநில காங்கிரஸுக்கு பொறுப்பாளராக ராஜீவ் சாதவ் இருந்து கடந்த தேர்தலைச் சந்தித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x