Published : 16 May 2021 07:48 AM
Last Updated : 16 May 2021 07:48 AM
சுதந்திரப் போராட்டத்துக்குப்பின் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.. பல இடங்களில், பல்வேறு காரணங்களால் மக்களுக்கு உதவ அரசு இல்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். டெல்லியில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் கல்வி மையம் சார்பில் நேற்று நடந்த காணொலி சந்திப்பில் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவுக்கு கொடுத்துள்ள மிகவும் வேதனையான நேரமிது. சுதந்திரத்துக்குப்பின் இந்தியா சந்தி்க்கும் மிகப்பெரிய சவால் கரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
கரோனா முதல் அலை இந்தியாவில் தாக்கும்போது, போடப்பட்ட லாக்டவுனால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவாலான சூழல் எழுந்தது. ஆனால், இப்போது பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் சவால்கள் எழுந்து உள்ளன. நாம் முன்னேறும் போது, சமூக ரீதியான பங்கும் இனி இருக்கும்.
கரோனா வைரஸின் மிகப்பெரிய பாதிப்புகளில் ஒன்று, பல்வேறு இடங்களில், பல்வேறு காரணங்களுக்காக மக்களுக்கு உதவ அரசு இல்லாமல் இருந்ததைப் பார்க்க நேர்ந்தது. பல இடங்களில் அரசால் மக்களுக்கு உதவ முடியவில்லை, அரசு இயந்திரம்வேலை செய்யவில்லை.
கரோனா பெருந்தொற்று முடிந்தபின் நாம் சமூகத்தை நோக்கி கேள்வி கேட்காவிட்டால், மிகப்பெரிய சோகத்தை இந்த பெருந்தொற்று விட்டுவிட்டுச் செல்லும். இந்தப் பெருந்தொற்று கடந்து செல்லும்போது, அரசாங்கங்கள் கூட தோல்வி அடைந்து, நம்பிக்கையற்ற சூழலுக்கு செல்லும் என நான் நம்புகிறேன்.இந்த பெருந்தொற்று காலம் நாம் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது, எந்த ஆணும், பெணும் தனித்து தீவில்விடப்படவில்லை.
சீர்திருத்தம் என்பது மறைமுகமாக இருக்காமல், வெளிப்படையாக இருக்க வேண்டும். குறு,சிறு, நடுத்தர துறைகளுக்கு விரைவாக திவால் செயல்முறையை அரசு அறிவிக்க வேண்டும்.
நான் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி டெல்லி ஐஐடியில் பேசியது அரசுக்கு எதிரானது அல்ல. ஆனால், நான் பேசியது பலநேரங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
2015ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி டெல்லி ஐஐடியில் ரகுராம் ராஜன் பேசுகையில் “கருத்துக்களுக்கான சூழலை மேம்படுத்துவதற்கு சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை அவசியம். எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கும் உடல் ரீதியான தீங்கு அல்லது வாய்மொழி அவமதிப்பு அனுமதிக்கப்படக்கூடாது. பேச்சு சுதந்திரம், விமர்சிக்கும் சுதந்திரம் நமக்கு அவசியம். 21ம் நூற்றாண்டுக்கு இது நம்மை தயார் படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT