Published : 16 May 2021 03:14 AM
Last Updated : 16 May 2021 03:14 AM
உத்தரபிரதேசம் சித்ரகுட் மாவட்ட சிறையில் இருந்த விசாரணைக் கைதிகளான முகீம் காலாவும், மெராஜ் அலியும் சக கைதியான அன்ஷு என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து சரணடைய மறுத்த அன்ஷு, சிறைக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரம்ஜான் அன்று காலை 9 மணிக்கு முகீம் காலாவும், மெராஜ் அலியும் சக முஸ்லிம் கைதிகளுடன் சிறப்பு தொழுகை நடத்தினர். அப்போது உத்தரபிரதேசத்தின் மற்றொரு பிரபலரவுடியான அன்ஷு தீட்ஷித் அங்கு நவீன கைத்துப்பாக்கியுடன் வந்துள்ளார். பிறகு முகீமையும், மெராஜ் அலியையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதை தடுக்க வந்த மற்ற சில கைதிகளை துப்பாக்கி முனையில் சிறைப்படுத்தியுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த சிறைக்காவலர்கள் அன்ஷுவை சரணடையும்படி கூறினர். இதற்கு மறுத்து காவலர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற அன்ஷு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். சுமார் 50 ரவுண்டு குண்டுகள் பொழிந்த இச்சம்பவத்தின் போது சிறையிலிருந்த சிசிடிவி கேமராக்கள் முடக்கப்பட்டதாக புகார் உள்ளது. இதுகுறித்து 6 மணி நேரத்தில் அறிக்கை தரும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அப்பகுதிஐ.ஜி சத்யநாரயண் மற்றும் மண்டல ஆணையரான தினேஷ் குமார் சிங்கிற்கு உத்தரவிட்டிருந்தார். இவர்களது அறிக்கையின் அடிப்படையில் சிறை கண்காணிப்பாளர் எஸ்.பி.திரிபாதி உள்ளிட்ட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அன்ஷுவால் கொல்லப்பட்ட முகீம் காலா, உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள கைரானாவின் ஜஹன்புரா கிராமத்தைச் சேர்ந்தவர். இங்கு கட்டிட சித்தாளாக இருந்த முகீம் காலா, 2013 முதல் கொலை, கொள்ளை, திருட்டு, ஆள் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டு பிரபல ரவுடியானார். உத்தரபிரதேச மற்றும் ஹரியானா மாநில காவல் துறையினரால் 56 வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.இங்கு ஆளும் பாஜக 2017 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் மேற்குப் பகுதியில் முகீம் காலாவின் நடவடிக்கைகளை முக்கியமாக முன்னிறுத்தியது. கைரானாவிலுள்ள இந்துக்களை, முகீம் காலா விரட்டியதால் 406 குடும்பத்தினர் இடம்பெயர்ந்து விட்டதாகப் புகார் கூறப்பட்டது.
உத்தரபிரதேசத்தின் அரசியல்வாதியும் பிரபல ரவுடியுமான முக்தார்அன்சாரியுடனும் முகீம் காலாவிற்குதொடர்பு இருந்ததாகக் கருதப்படுகிறது. முக்தாரின் சகாவான முன்னா பஜ்ரங்கி பாக்பத் சிறையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜுலை 8-ம் தேதி சக கைதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அன்சாரி கூறும் குற்றச்செயல்களை முகீம் செய்து வந்துள்ளார். இவருடன் சேர்த்து கொல்லப்பட்ட மெராஜ் அலி, காஜீபூரில் முக்தார் அன்சாரியின் முக்கிய சகாவாக இருந்துள்ளார். இதை வைத்து முக்தார் அன்சாரியின் ஆட்கள் குறி வைக்கப்படுவதாகப் கருதப்படுகிறது.
இருவரையும் சுட்டுக்கொன்ற அன்ஷு, லக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்து 2007 முதல் ரவுடியாகியுள்ளார். இவர் மீதும் ஆள்கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஒன்றரை வருடமாக பஞ்சாப் சிறையில் இருந்த முக்தார் அன்சாரியை மீண்டும் உத்தரபிரதேசத்துக்கு அழைத்துவர உ.பி. அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுத்திருந்தது. தற்போது சித்ரகுட்அருகிலுள்ள பாந்தா சிறையில்அடைக்கப்பட்டுள்ள அன்சாரி, சிசிடிவி கேமரா மூலம் லக்னோவில் இருந்து நேரடி கண்காணிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT