Last Updated : 15 May, 2021 12:31 PM

3  

Published : 15 May 2021 12:31 PM
Last Updated : 15 May 2021 12:31 PM

உ.பி.யில் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு சீல்: முதல்வர் யோகியின் கோரக்பூரில் தமிழரான ஆட்சியர் நடவடிக்கை

கே.விஜயேந்திரபாண்டியன்- யோகி ஆதித்யநாத்: கோப்புப் படம்

புதுடெல்லி

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் 4 மணி நேர சிகிச்சைக்கு ரூ.51,000 வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டத்தில் இதை தமிழரான ஆட்சியர் கே.விஜயேந்திரபாண்டியன், ஐஏஎஸ் எடுத்துள்ளார்.

பாஜக ஆளும் உ.பி.யின் முதல்வர் யோகியின் சொந்த மாவட்டம் கோரக்பூர். தற்போது இங்கு சுமார் 2000 பேர் கரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தனியார் மருத்துவமனைகளில் பலரும் கூடுதலாகப் பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கத் துவங்கி உள்ளனர். இதில் ஒன்றான பத்ரிகா ஹாஸ்பிடல் அன்ட் ரிசர்ச் சென்டரில் கோரக்பூர்வாசியான உதய் பிரதாப்சிங் தனது அன்ணி நீலம்சிங்கை ஏப்ரல் 30 இல் அனுமதித்துள்ளார்.

பத்ரிகாவில் 4 மணி நேர அனுமதிக்கு பிறகு கரோனா தொற்று குணமாகி விட்டதாக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இதற்கான சிகிச்சையின் மருத்துவக் கட்டணமாக ரூ.51,000 வசூலிக்கப்பட்டுள்ளது.

ரசீதும் அளிக்கப்படாதமையல், உதய் பிரதாபிற்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால், கோரக்பூர் மாவட்ட ஆட்சியரான கே.விஜயேந்திரபாண்டியனிடம் நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

சிவகங்கையை சேர்ந்த தமிழரான ஐஏஎஸ் அதிகாரி விஜயேந்திரபாண்டியன், அதன் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணையின் முடிவுகள் நேற்று வெளியானதில் உதய் பிரதாப்பின் புகார் உண்மை எனத் தெரிந்துள்ளது. இதையடுத்து 50 படுக்கைகள் கொண்ட முக்கிய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு, மூத்த நிர்வாகிகளான ராஜேஷ், சவுரப் ஆகிய இருவர் மீது வழக்குகளும் பதிவாகின.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் சட்டக்கல்வி பயின்ற ஆட்சியரான விஜயேந்திரபாண்டியன்.ஐஏஎஸ் கூறும்போது,‘ ‘கோரக்பூரின் சில தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற புகார்கள் வரத் துவங்கின.

இதனால் அவற்றை கண்கணிக்க மருத்துவர்கள் உள்ளிட்டோருடன் ஒரு நிபுணர் குழு அமைத்துள்ளோம். இதில், குணமாகி வீடு திரும்பியவர்களிடம் பெறப்பட்ட கட்டணங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இதை அறிந்து தனியார் பெற்ற கூடுதல் கட்டணங்களை திருப்பி அளிக்கத் துவங்கி விட்டனர். இதையும் விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.

இதேபோல், வெறும் ரூ.8,000 மதிப்புள்ள சிலிண்டருக்கு ரூ.40,000 வரை வசூலித்த அம்பே கேஸ் ஏஜென்ஸி மீதும் வழக்கு பதிவாகி ஆட்சியர் விஜயேந்திரபாண்டியனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் அவதிப்படும் பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு போன் செய்தால் ஏசி, வாஷின் மெஷின், மொபைல் உள்ளிட்டவை பழுது பார்க்கவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆரம்பநிலையிலேயே கரோனா சிகிச்சைக்கான ’கரோனா கிட்’ எனும் அடிப்படை மருந்துகளை வீடுகளுக்கு இலவசமாகவும் விநியோகிக்கப்படுகின்றன. இதற்கானப் பலனாக மருத்துவமனைகளில் கூட்டம் குறையத் துவங்கி இருப்பதாகத் தெரிகிறது.

தமிழரான ஐபிஎஸ் நடவடிக்கை

கோரக்பூர் மாவட்டக் காவல்துறையின் எஸ்எஸ்பியாக இருக்கும் பி.தினேஷ்குமார்.ஐபிஎஸ், மேட்டூரை சேர்ந்த தமிழர். இவரது பணியும் இங்கு பாராட்டை பெற்றுள்ளது.

இங்குள்ள துர்க்மான்பூரின் ஒரு மசூதியில் ஊரடங்கை மீறி கடந்த வெள்ளிக்கிழமை அதன் இமாம் முகம்மது ஹாசீம் தொழுகை நடத்தினார். இதற்காக அப்பகுதிவாசிகள் இமாமை சுற்றி வளைத்து அவரது குர்தாவை கிழித்து நையப்புடைத்துள்ளனர்.

இதன் மீதான வீடியோ பதிவு சமூகவலைதளங்களிலும் வைரலாகி சர்ச்சையானது. இதில் சட்டத்தை கையில் எடுத்தவர்களை அருகிலிருந்து பார்த்தும் அப்பகுதி காவல்நிலையக் கிளையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், அதன் துணை ஆய்வாளர் அருண்சிங் பணியிடை நீக்கம் செய்துள்ளார் எஸ்எஸ்பியான தினேஷ்குமார். இதன்மூலம், அப்பகுதியில் மூளவிருந்த மதக்கலவரம் தடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x