Published : 15 May 2021 10:01 AM
Last Updated : 15 May 2021 10:01 AM
இந்தியர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்காமல் ஏன் 6 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோகில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், உலகளவில் தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் இந்தியா 77-வது இடத்தில் உள்ளது. அதாவது ஒவ்வொரு 100 பேருக்கும் முதல் டோஸ் செலுத்துவதில் 77-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.
மற்ற நாடுகள் தடுப்பூசி செலுத்திய புள்ளிவிவரங்களோடு இந்தியாவை ஒப்பிட்டால், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வெற்றிகரமாகச் செய்து வருகின்றன, ஏறக்குறைய 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டன.
இந்தியர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்காமல், 6 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஏன் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இந்தியாவில் 10.08 சதவீத மக்களுக்கு மட்டுமே முதல் டோஸ் செலுத்தப்பட்டு இருப்பதும், 2.8 சதவீதம் மட்டுமே 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள் என்பது துரதிர்ஷ்டம். இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழம் மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் வெளியி்ட்டுள்ளது
கடந்த 2020, அக்டோபர் 16ம் தேதி சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகள், ஆலோசனைகளை மத்தியஅரசு நிராகரித்துவிட்டது. கரோனா வைரஸ் பரவலைக் கையாள்வதற்கு மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்தார்கள். நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற பரந்த கொள்கை, அதாவது இலவசத் தடுப்பூசிக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதிய கடிதத்தில், தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டிலும் மத்திய அரசு கொள்முதல் செய்து, இலவசமாக மாநிலங்களுக்கு வழங்கிட வேண்டும், நாடுமுழுவதும் பரந்துபட்ட தடுப்பூசித் திட்டம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால், பிரதமர் மோடியோ, மாநிலங்களே தங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார். சூழல் முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதும், கரோனா பரவல் அசுரத்தனமாக வளர்ந்து வருகிறது
இந்தியா மிகப்பெரிய நாடு, கடந்த 70 ஆண்டுகளாக மிகப்பெரிய மதிப்பை சர்வதேச அளவில் உருவாக்கியுள்ளோம். அந்த நம்பகத்தன்மையை பயன்படுத்தி, தடுப்பூசி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து தடூப்பூசி உற்பத்தியை அதிகரி்த்திருக்கலாம்.
3-வது அலை வருவதற்கு முன்பாக நாட்டில் 60 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். நாட்டு மக்களுக்குத் தேவையான தடுப்பூசியை தயாரிக்க நம் தேசத்துக்கு திறமை இருக்கிறது. சின்னம்மை, போலியோ போன்ற நோய்களை வெற்றிகரமாக சமாளித்துள்ளோம் என்ற வரலாறு இருக்கிறது இதை உலக நாடுகள் ஒப்புக்கொண்டு அங்கீகரித்துள்ளன.
ஆனால் இந்தியாவில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் இது இந்தியர்களுக்கு முதலில் பயன்படாமல், கோடிக்கணக்கான டோஸ்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இப்போது நமது குடிமக்கள் அதே தடுப்பூசிக்கு தடுமாறுகிறார்கள். மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்கா கூட அமெரிக்க மக்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையைக் கடைபிடித்தது. பல நாடுகளும் இதைத்தான் பின்பற்றின. ஆனால், மத்திய அரசு இதில் தோல்வி அடைந்துவிட்டது.
இவ்வாறு சக்திசிங் கோகில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT