Last Updated : 15 May, 2021 03:12 AM

1  

Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

ஆக்சிஜன் இயந்திரங்களைப் பதுக்கி விற்ற நவ்நீத் கல்ரா எங்கே?- ‘டெல்லியை புனரமைத்தவர்’ என்று முதல்வர் கேஜ்ரிவாலால் போற்றப்பட்டவர்

புதுடெல்லி

டெல்லியில் ‘கான் சாச்சா’ எனும் பெயரில் பிரபல உணவு விடுதி செயல்படுகிறது. கடந்த 7-ம் தேதி இந்த உணவகத்தில் அதிகாரிகள் சோதனை செய்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 524 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் பறிமுதல் செய்தனர். ரூ.20,000-க்கு வாங்கப்பட்ட இந்த இயந்திரங்கள், ரூ.80,000-க்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விடுதி உரிமையாளரும் டெல்லியின் பிரபல தொழிலதி பருமான நவ்நீத் கல்ரா தலைமறைவானார். இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த வாரம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு நவ்நீத் மனு தாக்கல் செய்தார். கடந்த செவ்வாய்கிழமை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். அங்கும் அவருக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை.

செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தபோது நவ்நீத் கல்ராவுக்காக ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா கூறும்போது, ‘‘கரோனாவால் உயிரிழப்பு அதிகரித்த நிலையில் பல உயிர்களைக் காக்கும் நோக்குடன் இவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்துள்ளார் நவ்நீத் கல்ரா. இது எப்படி குற்றமாகும்?’’ எனக் வாதித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் அத்துல் ஸ்ரீவாத்ஸவா கூறுகையில், ‘பொதுமக்களிடம் மோசடி செய்து பணம் பறிக்கும் நோக்கில் நவ்நீத் இதை செய்துள்ளார்’ எனத் தெரிவித்தார்.

‘உயிர்களைக் காக்கும் நோக்குடன் ஒருவர் வெளிநாட்டிலிருந்து பொருள் இறக்குமதி செய்து விற்றால் அது குற்றமா? லாபம் இல்லாமல் யார்தான் வியாபாரம் செய்வார்கள்?” என்று இந்த விவாதத்தின் போது நீதிபதிகள் கேட்டதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறும்போது, ’நியாயமான லாபம் வைப்பதில் தவறில்லை. ஆனால் சூழ்நிலையின் அபாயத்தை வைத்து, நோயாளிகளின் உறவினர்களிடம் பன்மடங்கு விலையை ஏற்றி விற்றிருக்கிறார். கான்சன்டிரேட்டர் விலைக்குக் கிடைக்குமா என்று பரிதாபமாகக் கெஞ்சும் ஒருவரிடம் இவர் இரக்கம் இல்லாமல் பேரம் பேசும் தொலைபேசி உரையாடல் பதிவு எங்களிடம் இருக்கிறது’ என்றனர்.

கடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி வென்றதைத் தொடர்ந்து, அரவிந்த் கேஜ்ரிவால், தனது பதவி ஏற்பு விழாவில் முக்கிய அழைப்பாளராக நவ்நீத் கல்ராவை அழைத்து கவுரவித்தார். அடுத்த சில நாட்களில் ‘டெல்லியைப் புனரமைத்தவர்’ (தில்லி கா நிர்மாதா) என்ற பெயரில் கேஜ்ரிவால் அரசால் விருது அளிக்கப்பட்டவர்களின் பட்டியலில் கல்ராவும் இடம் பெற்றிருந்தார்.

கல்ராவுக்கு ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடனும், அமர்சிங் உடனும் நெருக்கமான தொடர்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவே மத்திய அரசின் கையில் இருக்கும் டெல்லி போலீஸின் வேகமான நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நவ்நீத் கல்ரா மீதான வழக்கு விசாரணையை மே 18 -ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x