Published : 14 May 2021 10:51 AM
Last Updated : 14 May 2021 10:51 AM
செல்போனில் ஒருவருக்கு அழைப்புச் செய்யும்போது, தடுப்பூசி செலுத்துங்கள் என்று டயலர் டியூனுக்கு பதிலாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமான விழிப்புணர்வு செய்தியை ஒலிக்க விடுங்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. .
கரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் தடுப்பு விழிப்புணர்வு குறித்து மத்திய அரசு , டெல்ல அரசு எவ்வாறு தயாராகி இருக்கிறது என்பது குறித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் விபின் சிங், ரேஹா பிள்ளை அமர்வில் நேற்று விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதிகள் அமர்வு கூறியதாவது:
செல்போனில் யாருக்கு அழைப்புச் செய்தாலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று எரிச்சலூட்டும் செய்தி ஒலிக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இதை ஒலிக்கவிடப்போகிறீர்கள் எனத் தெரியவில்லை. உங்களிடம் போதுமான அளவு தடுப்பூசி தட்டுப்பாடின்றி வைத்துக்கொண்டு, இந்த செய்தியை ஒலிக்கவிட வேண்டும். ஆனால் மத்திய அரசிடம்தான் போதுமான அளவு தடுப்பூசிஇல்லை
மக்களுக்கு தடுப்பூசி செலுத்த போதுமான அளவு இல்லை. ஆனால், தடுப்பூசி செலுத்துங்கள் என செல்போனில் ஒலிக்கிறது. தடுப்பூசி இல்லாதபோது, இதை ஒலிப்பதில் என்ன பயன். ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி வழங்கிட வேண்டும், பணம் கொடுத்து வாங்க மக்கள் தயாராக இருந்தாலும் அவர்களுக்கு வழங்க இருப்பு இருக்க வேண்டும்.
தொடர்ந்து ஒரு செய்தியை மட்டும் ஒலிக்க விடுவதற்கு மாற்றாக பல விழிப்புணர்வு செய்திகளை வித்தியாசமான முறையில் உருவாக்க வேண்டும். செல்போனில் ஒருவர் அழைப்புச் செய்யும்போது, ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமான விழிப்புணர்வு செய்தியை ஒலிக்க விடுங்கள்.
களத்தில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறதோ அதற்கு ஏற்றார்போல் மக்களுக்கு தகவல்களை செல்போன் டயலர் டியூனில் ஒலிக்க விடுங்கள். இவ்வாறு வித்தியாசமான முறையில் பலவிதமான விழிப்புணர்வு செய்திகள் இருந்தால், அதைக் கேட்கும் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
தொலைக்காட்சி வர்ணனையாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்பவர்கள் ஆகியோர் மூலம் ஆக்சிஜன் செறியூக்கிகளின் பயன், தடுப்பூசிகளின் பயன்பாடு, ஆக்சிஜன் சிலிண்டர் எங்கு கிடைக்கும் உள்ளிட்ட பயனுள்ள தகவல்களை வழங்கிடுங்கள்.
நடிகர் அமிதாப் பச்சனிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூறுங்கள். கடந்த ஆண்டு கரோனா விழிப்புணர்வு குறித்த விளம்பரங்களான கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்றவை தொடர்ந்து ஒளிபரப்பாகின. அதேபோன்று இந்த முறை ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் செறியூக்கிகள், சிகிச்சை முறைகள் ஆகியவை குறித்து விளம்பரங்களை வெளியிடுங்கள். நாம் நேரத்தையும் காலத்தையும் இழந்து வருகிறோம், அவசரமாகப் பணியாற்ற வேண்டிய நேரம்.
வரும் 18ம் தேதிக்குள் கரோனா விழிப்புணர்வு தொடர்பாக நாளேடுகள், தொலைக்காட்சிகள், வானொலிகளில் என்ன மாதிரியான விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய அரசும், டெல்லி அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT