Published : 14 May 2021 08:59 AM
Last Updated : 14 May 2021 08:59 AM
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள 100 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனை வரும் 18 மற்றும் 20ம் தேதிகளில் இருக்கும் எனத் தெரிகிறது.
வரும் 18-ம் தேதி 9 மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும், 20ம் தேதி 10 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் பிரதமர் மோடி கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துதல் குறித்துஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனையின் போது அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் உடன் இருப்பார்கள்.
மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவது இதுதான் முதல்முறையாகும்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி பலமுறை ஆலோசனை நடத்திவிட்டார். கடந்த 2020ம் ஆண்டில் முதல்முறையாக கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து அவ்வப்போது மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த முறை நேரடியாக மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும், தீவிரப்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பிரதமர் மோடி வழங்குவார் எனத் தெரிகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 72 சதவீத கரோனா தொற்று 10 மாநிலங்களில்தான் இருக்கிறது. மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா,உத்தரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரப்பிரதேசம், மே.வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளில் 74 சதவீதமும் இந்த 10 மாநிலங்களில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT