Published : 13 May 2021 12:03 PM
Last Updated : 13 May 2021 12:03 PM
கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள 4-8 வார இடைவெளியை 12-16 வாரமாக மாற்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் உள்ளிட்ட மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகளும் 18- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்பட்டு வருகிறது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்தப்படவில்லை.
கோவாக்சின் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் 4 வார காலத்திற்கு பிறகு செலுத்தப்படுகிறது. அதேசமயம கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்கும் இடைவெளி 4-6 வாரமாக முதலில் பின்பற்ற்பட்டது.
பிறகு இந்த இடைவெளியை 4-8 வாரமாக மாற்றி மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. இந்தநிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்குமான கால அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை பரிந்துரைக்கப்பட்டுள்ள 12-16 வாரங்களுக்குள் செலுத்துமாறு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் அதன் பாதுகாப்பு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை மாற்றி அமைக்குமாறு தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழுவும், கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவும் பரிந்துரைத்தபடி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும், கோவாக்சின் தடுப்பூசிக்கு அல்ல. தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழு, கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு ஆகியவற்றின் பரிந்துரையை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரிசீலித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT