Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டம் பாஜக செல்வாக்குஅதிகம் உள்ள பகுதி. இங்கு இந்துக்கள் அதிகம் வாழும் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக முஸ்லிம் மவுலானா தேர்வாகிஇருப்பது அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.
ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் தெய்வீக நகரமான அயோத்தி, பாஜக செல்வாக்கு அதிகமுள்ள மாவட்டமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள கிராமப்பஞ்சாயத்துகளின் 40 உறுப்பினர்களுக்கான தேர்தலில் பாஜகவிற்கு வெறும் ஆறு இடங்களே கிடைத்தன. இதேபோன்ற பின்னடைவு, பாஜகவினரின் முக்கிய மாவட்டங்களாகக் கருதப்படும் மதுரா, வாரணாசி மற்றும் கோரக்பூரிலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தியின் ருடாவுலி சட்டப்பேரவை தொகுதியின் கிராமமான ராஜன்பூரில் இந்துக்கள் அதிகம் வாழ்கின்றனர். முஸ்லிம் வாக்குகள் 27 மட்டுமே உள்ளன.
6 பேர் போட்டி
இதற்கானப் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முஸ்லிம் மவுலானாவான ஹாபிஸ் அசீமுத்தீன்,ஐந்து இந்துக்கள் என மொத்தம்6 பேர் போட்டியிட்டனர். இதில் வாக்களித்த 600 உறுப்பினர்களில் முதலிடமாக 300 வாக்குகள் பெற்று அசீமுத்தீன் தலைவராகி உள்ளார். இதன்மூலம், இப்பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றாக இணைந்து வாழ விரும்புவதாகத் தெரிகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ராஜன்பூர் கிராமவாசியான சேகர் யாதவ் கூறும்போது, ‘மதரஸாவில் பயின்றவரான அசீமுத்தீனின் தேர்வு இங்கு நிலவும் மதநல்லிணக்கத்திற்கு உதாரணம். இவரை தோற்கடிக்க பாஜகவினர் செய்த முயற்சி வீணாகி உள்ளது’ எனத் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி முதல் துவங்கி நான்கு கட்டங்களாகப் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
இதன் முடிவுகள் மே 2 முதல் வெளியாகத் துவங்கியது. மொத்தம் உள்ள 75 மாவட்டங்களின் 3,050 கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களில் பாஜகவிற்கு 768 கிடைத்துள்ளது. எதிர்கட்சிகளில் அகிலேஷ்சிங் யாதவின் எஸ்பி 759, மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி(பிஎஸ்பி) 319, காங்கிரஸ் 125, ராஷ்டிரிய லோக் தளம் 69 மற்றும் சுயேச்சைகள் 1,071 இடங்களை பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT