Published : 12 May 2021 05:04 PM
Last Updated : 12 May 2021 05:04 PM
மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற தன் இரண்டு எம்எல்ஏக்களை அவர்களது பதவியை ராஜினாமா செய்து மக்களவை எம்.பி.க்களாகத் தொடர பாஜக உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பாஜக மக்களவை இடைதேர்தலில் தோல்வி ஏற்படும் என அஞ்சுவதாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 213 பெற்று மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தது. இதன் 294 தொகுதிகளில் பாஜகவிற்கு 77 கிடைத்தன.
இந்தமுறை பாஜக மக்களவையின் தனது 4 எம்.பிக்களை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைத்தது. இவர்களில், மக்களவையின் ஹுக்லி எம்.பியான லாக்கெட் சட்டர்ஜியும், ஆசனோல் எம்.பியும் மத்திய இணை அமைச்சருமான பாபுல் சுப்ரியோவிற்கு தோல்வி கிடைத்தன.
மாநிலங்களவையின் எம்.பியாக இருந்த ஸ்வப்னதாஸ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டும் பலன் இல்லை. எனினும், மற்ற 2 பாஜக எம்.பிக்களில் சாந்திபூர் தொகுதியில் ஜகன்நாத் சர்கார், 15,878 வாக்குகளில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.
கூச்பிஹார் மாவட்டத்தின் தின்ஹாத்தா தொகுதியில் இன்னொரு எம்.பியான நிஷித் பிரமானிக், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரை வெறும் 57 வாக்குகளில் வென்றுள்ளார்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜகவின் எம்எல்ஏ பதவியில் தொடர்ந்தால், அவர்கள் ராஜினாமா செய்த எம்.பி. தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடைபெறும். தற்போது திரிணமூல் காங்கிரஸ் அங்கு வெற்றி பெற்ற நிலையில் இடைதேர்தலில் அதன் தாக்கம் இருக்கும் என பாஜக கருதுகிறது.
இதன் காரணமாக, ஜஜன்நாத் மற்றும் நிஷித்தை தனது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தி விட்டு எம்பிக்களாகத் தொடர உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பாஜக மக்களவையில் தனது உறுப்பினர்கள் எண்ணிக்கையை உறுதியாக்கி வைக்கவும் விரும்புவது தெரிகிறது.
சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்தமையால் மத்திய இணை அமைச்சரான பாபுல்லும், லாகெட் சட்டர்ஜியும் மக்களவை எம்.பிக்களாகத் தொடர்வார்கள். எனினும், மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்து விட்டு போட்டியிட்ட ஸ்வப்னதாஸ் அதில் தொடர முடியாத நிலை உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT