Last Updated : 12 May, 2021 02:33 PM

4  

Published : 12 May 2021 02:33 PM
Last Updated : 12 May 2021 02:33 PM

தேர்தல் தோல்வியை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு; குலாம் நபி ஆசாத் தலைமையில் புதிய குழு: காங்கிரஸ் அறிவிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்| கோப்புப்படம்

புதுடெல்லி

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்ய மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

கரோனா தொடர்பான நிவாரண உதவிகளை வழங்குவதற்காகவும், ஒருங்கிணைக்கவும் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் குழு அமைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மோசமாக இருந்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தபோது, தலைவர் சோனியா காந்தி கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். இந்த தோல்விக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்படும், இதன் மூலம் நாம் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய புதிய குழுவையும், கரோனா நிவாரணத்துக்காக ஒரு குழுவையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்து உத்தரவிட்டுள்ளார்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

“தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யும் குழுவுக்கு மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தலைவராக இருப்பார். அந்தக் குழுவில் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், மணிஷ் திவாரி, வின்சென்ட் ஹெச் பாலா, ஜோதி மணி ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்தக் குழு அடுத்த 2 வாரங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யும்.

கரோனா வைரஸ் நிவாரண உதவிகளை வழங்க மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு குலாம் நபி ஆசாத் தலைவராகவும், அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், பவான் குமார் பன்சால், பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மணிஷ் சாத்ரத், அஜெய் குமார், பவன் கேரா, குர்தீப் சிங் சப்பால், வி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon