வடகிழக்கு மாநிலங்களில் கரோனா முன்னெச்சரிக்கை: அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

வடகிழக்கு மாநிலங்களில் கரோனா முன்னெச்சரிக்கை: அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை
Updated on
1 min read

கோவிட் 2ம் அலையை எதிர்த்து போராட, 8 வடகிழக்கு மாநிலங்களுக்கு, வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தீவிரமாக உதவி வருவதாக, அத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

கோவிட்-19 தயார்நிலை குறித்து வடகிழக்கு மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், திட்ட செயலாளர்கள், மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோருடன் டாக்டர் ஜித்தேந்திர சிங் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் தடையற்ற ஆக்சிஜன் விநியோகத்தை உற்பத்தி செய்ய 8 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை ஜப்பான் மற்றும் ஐ.நா வளர்ச்சி திட்ட அமைப்பு ஆகியவை வழங்கவுள்ளதாக டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.

இந்த ஆலைகள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 1300 மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன்களை விநியோகிக்க உதவும். சுகாதாரத்துறை தொடர்பான திட்டங்களை வடகிழக்கு மாநிலங்கள் விரைந்து அனுப்பும்படியும், அவற்றை வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றும் என ஜித்தேந்திர சிங் உறுதி அளித்தார்.

ஆக்சிஜன், தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அனைத்து மாநிலங்களும் தெரிவித்துள்ளதாகவும், இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வாங்க பதுக்க வேண்டாம் என மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். பீதியடையாமல் இருப்பதுதான் கோவிட்-19-ஐ எதிர்த்து போராடும் மந்திரம் என அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in