Published : 12 May 2021 12:41 PM
Last Updated : 12 May 2021 12:41 PM
இந்தியாவில் தற்போது மக்களை வாட்டி எடுத்துவரும் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், பாதிப்பு வளைகோடு கீழே சரிவதற்கும், குறைவதற்கும் ஜூலை மாதம் வரை ஆகலாம் என மூத்த வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களைச் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளியிருக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இந்த கரோனா 2-வது அலையிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் லாக்டவுனை அறிவித்துள்ளன. இந்த பாதிப்பு எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பிரிவின் இயக்குநர், வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரிப்பதற்கு உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்கள்தான் காரணமாகும். ஆனால், உருமாறிய கரோனா வைரஸ்கள் மிகுந்த ஆபத்தானவை என்பதற்கான சான்று இல்லை. ஆனால், தொற்றை அதிகப்படுத்துவதுதான் வேதனையாக இருக்கிறது.
ஆனால், கரோனா 2-வது அலை உச்சகட்டத்தை எட்டிவிட்டது என நாம் முன்கூட்டியே கூற முடியாது. கரோனா பாதிப்பு வளைகோடு குறையத் தொடங்கியுள்ளது என்றாலும், மறுபுறம் உச்சத்தை நோக்கிச் சென்ற வளைகோடு குறையவில்லை.
கரோனா பாதிப்பு வளைகோடு குறைந்து, தட்டையான நிலைக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகலாம், அதாவது ஜூலை மாதம் வரைகூட ஆகலாம். தெளிவாகக் கூற வேண்டுமென்றால், கரோனா வளைகோடு சரியத் தொடங்கிவிட்டாலும், நாள்தோறும் அதிகமான அளவு பாதிப்பு வந்துகொண்டேதான் இருக்கும். கரோனா முதல் அலையைப் போன்று பாதிப்பு வளைகோடு வேகமாகச் சரிந்துவிடாது.
கரோனா முதல் அலையில் பாதிப்பு குறைவு வளைகோடு சீரான வேகத்தில் கீழே இறங்கியது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள் 2-வது அலை தொடங்கும்போதே அதிகமான எண்ணிக்கையில்தான் பாதிப்பு தொடங்கியது. அதாவது 96 ஆயிரமாகத் தொடங்கி, 4 லட்சம்வரை சென்றது.
ஆதலால், குறைவதற்கும் அதிகமான காலம் எடுக்கும். அதுவரை தொடர்ந்து கரோனா பாதிப்பு தினசரி அதிக அளவில் வரும். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் உயிரிழப்பு குறித்துவரும் புள்ளிவிவரங்கள் தவறானவை, நாம் பதிவு செய்யும் புள்ளிவிவரங்கள் தவறானவை.
உருமாற்ற கரோனா வைரஸால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்குக் கூடுதல் எதிர்ப்பு சக்தி வரும் என்று கூறுகிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, பிசிஜி தடுப்பு மருந்து நாம் குழந்தையாக இருந்தபோது செலுத்திக்கொண்டோம். ஆனால், மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அது தொடர்பாகப் பல வாதங்கள் செய்திறோம்.
மக்கள் யாரும் வைரஸைப் பரப்பும் நோக்கில் இல்லை. ஆனால், வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பளிக்கிறார்கள். பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதால், எளிதில் மற்றவர்களுக்குப் பரவுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது. நமக்கெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிட்டது என்று எண்ணி, பிரம்மாண்டத் திருமணங்கள், விஷேசங்களை ஜனவரி, பிப்ரவரியில் நடத்தினோம், அதனால் சூப்பர் ஸ்பிரெட் களங்கள் உருவாகின. இது தவிர்த்து தேர்தல் பிரச்சாரங்கள், மத நிகழ்ச்சிகள் போன்றவற்றாலும் தொற்று அதிகரித்து, 2-வது அலை வந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல், பிப்ரவரி மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியபோது, குறைந்த அளவுதான் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. அதாவது 2 சதவீதம் மக்கள்தான் தடுப்பூசி செலுத்தியிருந்தார்கள்.
உண்மையில் தடுப்பூசிதான் பாதுகாப்பானது. தடுப்பூசிகள் மூலம் பக்கவிளைவு என்பது மிகவும் அரிதானது. தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்கு வாய்ப்பே இல்லை.
நாம் மந்தைத் தொற்றை அடைவதற்கு நாட்டில் 75 சதவீதம் மக்கள் கரோனாவில் பாதிக்கப்படவேண்டும் அல்லது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இப்போதிருந்து நாம் இலக்கை வகுத்துச் செயல்பட வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை இன்னும் வேகப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்து கரோனா அலைகள் வருவதற்கும் சாத்தியங்கள் உள்ளன''.
இவ்வாறு ஷாதிக் ஜமீல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT