Published : 12 May 2021 09:15 AM
Last Updated : 12 May 2021 09:15 AM
இந்திய கிராமப்புறங்களிலும் கரோனா பரவல் காணப்படும் நிலையில் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த, பஞ்சாயத்துகள்/ ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சவாலை எதிர் கொள்வது தொடர்பாகவும், தலைமைப் பண்பை வழங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அமைச்சகம் ஆலோசனை விடுத்துள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மருத்துவர்கள், மருத்துவமனை வழங்கியுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி ஊரக சமூகத்தினரிடையே அவற்றின் தன்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதேவேளையில் தவறான கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளை நீக்கும் வகையிலும் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள், ஆசிரியர்கள், ஆஷா பணியாளர்கள் போன்றோருக்கு விரல்களில் பயன்படுத்தும் ஆக்சி மீட்டர்கள், என்-95 முகக் கவசங்கள், உடல் வெப்ப பரிசோதனைக் கருவிகள், கிருமிநாசினிகள் முதலிய பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு முன்கள தன்னார்வலர்களாக அவர்களை இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
பரிசோதனை, தடுப்பூசி மையங்கள், மருத்துவர்கள், மருத்துவமனை படுக்கைகள் போன்றவற்றின் அண்மைய தகவல்களை ஊரக மக்களுக்கு வழங்குவதற்காக பஞ்சாயத்து அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பொது சேவை மையங்கள் போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய உள்கட்டமைப்பை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏழை மக்களுக்கு கிராம அளவில் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் பொருட்களின் விநியோகம், குடிநீர் வழங்கல், துப்புரவு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு, சுகாதாரம், வருவாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், கல்வி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் உருவாக்கி, கொவிட் பெருந்தொற்றின் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அது சம்பந்தமான பொது சுகாதார விஷயங்களில் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் அதன் குழுக்களின் செயல்பாடுகளை கண்காணிக்குமாறு பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் சுனில் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT