Published : 11 May 2021 02:10 PM
Last Updated : 11 May 2021 02:10 PM
காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் மக்களைத் தவறாக வழிநடத்துவதையும், மக்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்துவதையும், மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கைக்கு விரோதமாக இருப்பதையும் நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில், மோடி அரசின் பாகுபாடு, உணர்வின்மை, திறமையின்மை ஆகியவற்றால்தான் கரோனா 2-வது அலை வந்துள்ளது எனக் கூறி கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''கரோனாவுக்கு எதிரான போரில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்பட உயர்மட்டத் தலைவர்களின் போலியான நடத்தை, சிறுபிள்ளைத்தனமான பேச்சு ஆகியவை நினைவில் வைக்கப்படும்.
உங்கள் கட்சியும், உங்கள் தலைமையும் லாக்டவுனுக்கு எதிராகப் பேசினீர்கள். ஆனால், என்ன செய்தீர்கள். 2-வது அலை குறித்து மத்திய அரசு அளித்த அறிவுரைகளைப் பின்பற்றாமல், தங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறி கேரளாவில் மிகப்பெரிய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி கரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்தீர்கள். போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்துவிட்டு, கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனப் பேசுகிறீர்கள்.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கரோனா வைரஸ் பரவல் குறித்த கண்காணிப்பை எந்தெந்த மாநிலங்கள் சரியாகச் செய்யவில்லை என்ற புள்ளிவிவரங்களை எடுத்துப் பாருங்கள். காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலம் ஏன் முறையாக நடத்தவில்லை, உயிரிழப்பு ஏன் அதிகரித்தது எனக் கேள்வி கேளுங்கள். இந்தச் சவாலான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் நடத்தையும், செயல்பாடும் எனக்கு அதிர்ச்சியாக இல்லை, வேதனையாகத்தான் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் சில உறுப்பினர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். ஆனால், மூத்த தலைவர்கள் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள். இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பி மக்களை தவறாக வழிநடத்துவதையும், பதற்றத்தை உருவாக்குவதையும் நிறுத்த வேண்டும்.
இந்தக் கடிதத்தை நான் ஆழ்ந்த வேதனையுடன்தான் எழுதினேன். இதுபோன்று ஒருபோதும் கடிதமும் எழுதமாட்டேன். ஆனால், காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் ஏற்படுத்தும் குழப்பம் காரணமாகவே இந்தக் கடித்ததை நான் எழுதினேன்.
காங்கிரஸ் கட்சிக்கும், ஆளும் மாநிலங்களுக்கும் இடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் பல்வேறு தொடர்பின்மை சிக்கல், இடைவெளி இருக்கிறதா. ஏப்ரலில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தடுப்பூசியை நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும் என்றனர். இப்போது மாற்றிப் பேசுகிறார்கள்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி என்பது தேசத்தின் பெருமையை, மரியாதையைக் குறிக்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தடுப்பூசி குறித்து மக்கள் மனதில் சந்தேகங்களை எழுப்பி, ஏளனம் செய்ய முயல்கிறார்கள். உங்கள் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கூட இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.
மத்திய அரசின் மத்திய விஸ்டா திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் புதிய நாடாளுமன்றம் குறித்து தேவையை எழுப்பியது. அப்போது இருந்த சபாநாயகர் மீரா குமார், இதை மக்களவையில் எடுத்துக் கூறினார். சத்தீஸ்கரில் தற்போது புதிய சட்டப்பேரவை கட்டப்பட்டு வருகிறதே?''
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT