Published : 11 May 2021 10:15 AM
Last Updated : 11 May 2021 10:15 AM
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்து கரோனா அலை உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக பிட்ச் ரேட்டிங் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மே 5-ம் தேதி நிலவரப்படி இந்திய மக்கள் தொகையில் 9.4 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 9-ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 16.94 கோடிபேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக உலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பொருளாதார மதிப்பீடு தர நிர்ணயம் வழங்கும் பிட்ச் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடந்து வருகிறது. தடுப்பூசி பணிகள் மெதுவாக நடந்தால், இந்தியாவில் தற்போதைய 2-வது அலை முடிந்தபின், அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகும் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது.
2-வது அலையில் நிலவும் குறியீடுகளின்படி, நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் இதனால், ரிசர்வ் வங்கி , நிதி நிறுவனங்களைச் சிக்கலில் இருந்து மீட்க மேலும் பல்வேறு பொருளாதாரச் சலுகைகளை வழங்கலாம்.
2-வது அலையில் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தபோதிலும்கூட 2020-ம் ஆண்டில் முதல் அலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு 2-வது அலையில் ஏற்படுமா என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு ஏற்படவில்லை.
ஏப்ரல் மே மாதங்கள் மட்டும் பொருளாதார செயல்பாடுகள் மந்தமடையலாம், பொருளாதார மீட்சி சற்று பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். .
தற்போதுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை அதிகாரிகள் அமல்படுத்தினாலும், பொருளாதார நடவடிக்கையை பாதிக்காத வகையில் இருந்து வருகிறது. ஆனால் அதிகமான மாநிலங்களில் நீண்ட கால லாக்டவுனை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT