Last Updated : 11 May, 2021 09:41 AM

11  

Published : 11 May 2021 09:41 AM
Last Updated : 11 May 2021 09:41 AM

காற்றில் பறந்த கரோனா தடுப்புவிதிகள்: உ.பி.யில் மதகுரு இறுதிச்சடங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு.

மதகுருவின் இறுதிச்சடங்கில் கரோனா தடுப்பு விதிகளை மதிக்காமல் பங்கேற்ற மக்கள் | படம் ஏஎன்ஐ

பதாயுன்

உத்தரப்பிரதேச மாநிலம் பதாயுன் மாவட்டத்தில் முஸ்லிம் மதகுரு இறுதிச்சடங்கின் போது, கரோனா தடுப்பு விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் எந்த இறுதிச் சடங்கு நடந்தாலும், 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவிந்தது சுகாதாரத்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பதாயுன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கல்ப் சர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ பதாயுன் நகர முஸ்லிம் மதகுரு அப்துல் ஹமீது முகமது சலிமுல் காத்ரி ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.

பதாயுன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கல்ப் சர்மா

அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திடீரென மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் பதாயுன் மசூதியில் குவிந்தனர். கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும் திணறினர். மாநிலத்தில் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலும், கரோனா விதிகளை மதிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர்.

பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், தொற்றுநோயை பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

ஆனால், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காட்சிகளில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மக்களில் பெரும்பகுதி மக்கள் முக்ககவசம் அணியாமல் வந்திருந்தனர். சமூக விலகலைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றிருந்தனர். உ.பி.யில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்று மக்கள் கூட்டமாகக் கூடுவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x