Published : 10 May 2021 08:51 PM
Last Updated : 10 May 2021 08:51 PM

கங்கையில் மிதக்கும் சடலங்கள்; மாறிமாறி குற்றஞ்சாட்டிக் கொள்ளும் உ.பி., பிஹார் அரசுகள்: அச்சத்தில் மக்கள்

பிஹார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதால் அங்கு நோய் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

பிஹார் உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநில எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள நகரம் சவுஸா. இது பிஹாரில் இருந்தாலும் உ.பி. எல்லையையும் ஒட்டி இருக்கிறது. இந்த நகரத்தின் வழியாகக் கங்கை நதி பாய்ந்து செல்கிறது.

இந்தப் பகுதியில் இன்று காலை 40க்கும் மேற்பட்ட சடலங்கள் தண்ணீரில் மிதந்தன. இதனைப் பார்த்த கிராமவாசிகள் கலக்கமடைந்தனர்.

இது குறித்து சவுசா மாவட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, காலையில் சவுசாவின் மகாதேவ் காட் பகுதியில் 40 முதல் 45 சடலங்கள் மிதந்தன. 100 சடலங்கள் கூட இருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். சடலங்கள் எல்லாம் உப்பியுள்ளன. இவை எங்கிருந்து வந்தன என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது.

உ.பி.,யின் பராயிச், வாரணாசி அல்லது அலகாபாத்தில் இருந்தே வந்திருக்க வேண்டும். ஏனெனில் பிஹாரின் இப்பகுதியில் சடலங்களை நதியில் வீசும் பழக்கமில்லை. மேலும், அவை கரோனாவால் உயிரிழந்தோர் சடலமா என்ற சந்தேகமும் உள்ளது. அதனால், கிராமவாசிகள் கரோனா அச்சத்தில் உள்ளனர் என்றார்.

ஆனால், சடலங்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தது அல்ல என்று உபி அரசும் அடித்துச் சொல்லி வருகிறது. ஆனால், உ.பி காங்கிரஸ் கட்சியினரோ கரோனா மரணங்களை மறைப்பதற்காக மாநில அரசுக்குத் தெரிந்தே சடலங்கள் ஆற்றில் வீசப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x