Published : 10 May 2021 04:38 PM
Last Updated : 10 May 2021 04:38 PM
காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், அந்தத் தேர்தல் கரோனா வைரஸ் பாதிப்பு முடியும்வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டு, அதை ஆய்வு செய்யக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவது குறித்துப் பேசப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாகவும், ஜூன் 23-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்குப்பதிவும் நடக்கும் எனத் தெரிவித்தார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமடைந்துவரும் சூழலில் கட்சித் தலைமைக்குத் தேர்த்ல நடத்துவது சரியானதாக இருக்காது எனத் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், “நாட்டில் கரோனா வைரஸ் பிரச்சினை முடியும்வரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் பற்றிப் பேச வேண்டாம். இதே கருத்தை மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் வலியுறுத்தினார்.
குலாம் நபி ஆசாத் பேசுகையில், “இப்போதுள்ள சூழலில் கட்சியில் யாரும் தேர்தல் நடத்தக் கோரி கேட்கவில்லை. மத்திய தேர்தல் குழு அறிவித்த தேர்தலைத் தள்ளி வைக்கலாம்” எனத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திட்டமிட்டபடி தேர்தல் நடந்தால், ஜூன் 1-ம் தேதி தேர்தல் அறிவிக்கையும், வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை போன்றவை ஜூன் 2 முதல் 7-ம் தேதி வரையிலும் நடக்கும். 23-ம் தேதி தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், 3-வது முறையாகத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT