Published : 10 May 2021 02:02 PM
Last Updated : 10 May 2021 02:02 PM
ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு எதிரான கொலை வழக்கில் லுக் அவுட் நோட்டீஸை டெல்லி போலீஸார் பிறப்பித்துள்ளனர்.
23 வயதான மற்றொரு மல்யுத்த வீரர் சாகர் தான்கட்டைக் கொலை செய்த வழக்கில் சுஷில் குமார் தேடப்பட்டுவரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் செவ்வாய்கிழமை மல்யுத்த வீரர் சாகர் தான்கட்டை அவரின் வீட்டிலிருந்து மல்யுத்த வீரர் சுஷில் குமார், அவரின் நண்பர்கள் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கிற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து சாகர் தன்கட்டைக் கடுமையாகத் தாக்கிவிட்டு சுஷில் குமாரும், அவரின் நண்பர்களும் தப்பிவிட்டனர்.
மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலிஸிடம் சாகர் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
மல்யுத்த வீரர் சுஷில் குமாரை போலீஸார் தேடி வந்த நிலையில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சாகர் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து வடமேற்கு போலீஸ் துணை ஆணையர் குரிக்பால் சிங் சித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுவதாவது:
''மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார், சாகர் தன்கட் இருவரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தனர். இதில் இருவருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டுள்ளது. சுஷில் குமாரைப் பற்றி அவப்போது சாகர் தன்கட் விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. சாகர் தன்கட்டுக்குப் பாடம் கற்பிக்க எண்ணி, கடந்த செவ்வாய்க்கிழமையன்று சாகர் தன்கட்டை அவரின் வீட்டிலிருந்து கடத்தி, வடமேற்கு டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கிற்குக் கொண்டு சென்றனர்.
அங்குள்ள பார்க்கிங் பகுதியில் சாகர் தன்கட், சுஷில் குமார் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சாகர் தன்கட்டை சுஷில் குமாரும், அவர்களின் நண்பர்களும் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து, சாகரின் நண்பர், சாகரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். சோனுவுக்கும் காயம் ஏற்பட்டது. சாகர் தரப்பில் போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் சத்ராஸன் மைதானத்தில் சுஷில் குமார் மற்றம் அவரின் நண்பர்கள் பயன்படுத்திய வாகனத்தை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் துப்பாக்கி, கட்டைகள் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மல்யுத்த வீரர் சாகர் தன்கட் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றினர். மல்யுத்த வீரர் சுஷில் குமார் அவரின் நண்பர்கள் மீது போலீஸார் ஆயுதத் தடுப்புச் சட்டம், ஐபிசி பிரிவு 302, 365, 120பி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நடந்தபின், சுஷில் குமார் ஹரித்துவார் சென்று, அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றுள்ளார். பின்னர் சுஷில் குமார் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே வருகிறார். இதனால் சுஷில் குமார் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். இதையடுத்து, சுஷில் குமார் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸை டெல்லி போலீஸார் பிறப்பித்துள்ளனர்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT