Last Updated : 10 May, 2021 01:28 PM

3  

Published : 10 May 2021 01:28 PM
Last Updated : 10 May 2021 01:28 PM

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்: ஒவைசி வலியுறுத்தல்

பிரதமர் மோடி, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி | கோப்புப் படம்.

ஹைதராபாத்

கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் இல்லாமல், மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமல், மருந்து இல்லாமல் மதிப்பிட முடியாத உயிரை இழந்தவர்களின் குடும்பத்தாரிடம் பிரதமர் மோடி கண்டிப்பாக மன்னிப்பு கோர வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து மக்களைத் திணறவைத்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், போதுமான மருத்துவர்கள் இல்லாததாலும், மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமலும், மருந்துகள் கிடைக்காமலும் மக்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளார்.

அவர் பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:

''பிரதமர் மோடி நாடாளுமன்றத்தையும், ஊடகத்தினரையும் சந்திக்க அச்சப்படுகிறார். கல்லறைகள் பற்றியும், இடுகாடு பற்றியும் அவரால் மணிக்கணக்கில் பேச முடியும். ஆனால், ஒருபோதும் மருத்துவமனைக்குச் செல்லமாட்டார். ஆக்சிஜன் பற்றாக்குறையால், படுக்கை வசதி, மருந்துகள் பற்றாக்குறையால், மருத்துவர்கள் தட்டுப்பாட்டால் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களிடம் பிரதமர் மோடி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். தடுத்திருக்கக்கூடிய இந்தத் துயரங்களுக்கு மோடி கண்டிப்பாகப் பொறுப்பேற்க வேண்டும்.

மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையை பிரதமரின் தடுப்பூசி விலைக் கொள்கை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. ஏன் போதுமான தடுப்பூசிகளை முன்கூட்டியே ஆர்டர் செய்யவில்லை? நமக்குப் போதுமான அளவு தடுப்பூசி இல்லை என்ற தெரிந்த பின்பும், பிரதமர் மோடி தனது புகைப்படத்தை அட்டைப் பெட்டியில் ஒட்டி, வெளிநாடுகளுக்குத் தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் பணியை ஏன் தொடர்ந்தார்?

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் அனுமதிக்க பிரதமர் மோடி மறுப்பதேன்? பிற இந்திய நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளுக்குக் கட்டாய அங்கீகாரம் பெற வேண்டும் என ஏன் உத்தரவிடவில்லை? உங்களின் மோசமான தடுப்பூசிக் கொள்கையை ஏன் மாநிலங்கள் மீது திணிக்க முயல்கிறீர்கள்?

இலவசமாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான தடுப்பூசி தேவை. தடுப்பூசி கொள்முதலைப் பரவலாக்க வேண்டும். தடுப்பூசி செயல்படுத்தும் திட்டத்தில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்த ஆன்லைனில் முன்பதிவு என்பதை நீக்குங்கள். அனைவருக்கும் எளிதாக தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யுங்கள்''.

இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x