Published : 10 May 2021 12:16 PM
Last Updated : 10 May 2021 12:16 PM
இந்த தேசம் கரோனா வைரஸின் பிடியில் சிக்கி, மூச்சு விடத் திணறும்போது, மாற்று யதார்த்தம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சாடியுள்ளார்.
கடந்த 7 நாட்களாக இந்தியாவில் 180 மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவல் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று பேசியதற்கு சசி தரூர் பதிலடி அளித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று அமைச்சர்கள் குழுவின் 25-வது கூட்டத்தில் பேசுகையில், “180 மாவட்டங்களில் புதிதாக கரோனா பாதிப்பு கடந்த 7 நாட்களாக இல்லை. கடந்த 14 நாட்களாக 18 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. 21 நாட்களாக 54 மாவட்டங்களில் தொற்று இல்லை. 32 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாகத் தொற்று கிடையாது” எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை ட்விட்ரில் டேக் செய்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதில், “மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இந்த தேசம் கரோனா பிடியில் சிக்கி மூச்சுவிடத் திணறும்போது, இந்தியர்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்து உலகம் வேதனைப்படும்போது, அவர் மாற்று யதார்த்தம் குறித்துப் பேசுகிறார்.
இந்தியாவின் 3-வது கட்டத் தடுப்பூசி முன்பதிவு செய்துள்ளதற்கு வந்துள்ள குறுஞ்செய்தி குறித்தோ, போலி மருந்துகளை விளம்பரம் செய்தது குறித்தோ, உறுதி செய்யப்படாத சிகிச்சை குறித்தோ அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி கொண்டாடுவார் எனக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? நம்முடைய அரசு வெளியிடும் எந்த எண்ணிக்கையையும் யாரும் நம்பமாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஹர்ஷவர்தன், 3-வது கட்டத் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யும் கோவின் தளம் குறித்துப் புகழ்ந்திருந்தார். அதில் 3 மணி நேரத்தில் 80 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளார்கள், 1.45 கோடி எஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.
இதைச் சுட்டிக்காட்டி, ஹர்ஷவர்தனை விமர்சித்து சசி தரூர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “அதிகமான எஸ்எம்எஸ் அனுப்பப்படுவது என்பது கரோனா வைரஸை வென்றுவிட்டதற்கான அடையாளமா? பதஞ்சலி நிறுவனத்தின் கரோனில் மாத்திரையை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்தமைக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு விளக்கம் கேட்டது. அந்த விளக்கத்தைக் கேட்க நானும் தயாராக இருக்கிறேன், தேசமும் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில், “பட்ஜெட்டில் மத்திய அரசு தடுப்பூசிக்காக ஒதுக்கீடு செய்த ரூ.35 ஆயிரம் கோடியை ஏன் செலவிடவில்லை. இந்தப் பணத்தைப் பயன்படுத்தி, மாநிலங்களுக்குத் தடுப்பூசி வாங்கலாமே. நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தபின் ஏன் பணத்தைச் செலவிடாமல் மத்திய அரசு அமர்ந்திருக்கிறது. ஜிஎஸ்டி வருவாய் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசலில் வரி வருவாய் கொட்டுகிறது. ஆதலால் தடுப்பூசி வாங்குங்கள்” என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT