கரோனா; தமிழகம் உள்ளிட்ட 25 மாநில ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ. 8923.8 கோடி மானியம்: முன்கூட்டியே விடுவித்தது மத்திய அரசு

கரோனா; தமிழகம் உள்ளிட்ட 25 மாநில ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ. 8923.8 கோடி மானியம்: முன்கூட்டியே விடுவித்தது மத்திய அரசு
Updated on
1 min read

தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 8923.8 கோடி மானியத்தை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்தது.

25 மாநில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியமாக ரூ. 8923.8 கோடியை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வழங்கியுள்ளது.

இதன்படி தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்துராஜ் அமைப்புகளின் மூன்று அடுக்குகளான கிராமம், வட்டாரம் மற்றும் மாவட்டங்களின் நலனுக்காக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இது 2021-22 ஆம் ஆண்டிற்கான நிபந்தனையற்ற நிதியின் முதல் தவணையாகும். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, நிபந்தனையற்ற நிதியின் முதல் தவணை 2021 ஜூன் மாதம் மாநிலங்களுக்கு விடுவிக்கப்படுவதாக இருந்தது. எனினும் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாகவும், பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட முன்கூட்டியே உதவித்தொகையை விடுவிக்க நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நிபந்தனையற்ற நிதியை வழங்குவதற்கு 15-வது நிதி ஆணையம் விதித்திருந்த ஒரு சில நிபந்தனைகளும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு முதல் தவணையை வழங்குவதில் தளர்த்தப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in