Published : 09 May 2021 01:55 PM
Last Updated : 09 May 2021 01:55 PM
அசாம் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், அங்கு யாரை முதல்வராக்குவது என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
அசாமில் சமீபத்தில் நடந்து முடிந்த 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றி 2-வது முறையாக ஆட்சிையக் கைப்பற்றியது.
கடந்த தேர்தலின்போது அசாம் முதல்வராக சர்பானந்த சோனாவாலை முன்நிறுத்தி பாஜக தேர்தலில் வென்றது. ஆனால் இந்த முறை அசாம் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் பாஜக தேர்தலில் வென்றது.
சர்பானந்த சோனாவால் அசாம் மாநிலத்தின் பூர்வீகக் குடிகளான சோனாவல்-கச்சாரி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடந்த தேர்தலில் பாஜக வென்றது.
ஹிமாந்தா பிஸ்வா சர்மா, வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியவர். இருவருமே முதல்வர் பதவிக்கு போட்டியாக இருப்பதால், இருவரில் யாரை முதல்வராக நியமிப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்த இருவரையுமே பாஜக மேலிடம் அழைத்தது.
ஹிமாந்தா பிஸ்வா சர்மா, சோனாவல் இருவருமே நேற்று டெல்லி சென்றனர். இதில் பிஸ்வா சர்மா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இல்லதுக்கு சென்று பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பு முடிந்தபின் இருவருமே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.
சர்பானந்தா சோனாவாலும் பாஜக தேசியத் தலைவர் நட்டாவை அவரின் இல்லத்தில் சந்தித்தார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா ஆகியோருடன் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, சோனாவால் இருவரும் தனித்தனியே சந்தித்துப் பேசினர்.
இந்தச் சூழலில் அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவல் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஜெகதீஷ் சந்திர முகியிடம் இன்று காலை வழங்கினார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, சோனாவல் இருவரும் நேற்று சந்தித்துப்பேசியபின் மாநிலத்தின் முதல்வராக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பிரதமர் மோடியும் ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை குவஹாட்டியில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷ், துணைத் தலைவர் பைஜெயந்த் ஜெ பாண்டா, மத்திய அமைச்சர் நரேந்திர தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஹிமாந்தா பிஸ்வா சர்மா உரிமை கோருவார் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT