Published : 09 May 2021 11:52 AM
Last Updated : 09 May 2021 11:52 AM
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 10 வயது சிறுவன் ஒருவன் சாலைகளில் சாக்ஸ் விற்றுக்கொண்டிருந்த வீடியோ வைரலான நிலையில், அந்தச் சிறுவனைத் தொடர்பு கொண்டு உதவிகளை அறிவித்துள்ளார் முதல்வர் அமரீந்தர் சிங்.
கரோனா பெருந்தொற்று குழந்தைகளின் கல்வியைப் பறித்ததோடு ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பலரை தொழிலாளர்களாக மாற்றியிருக்கிறது.
அப்படித்தான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வன்ஷ் சிங் என்ற 10 வயது சிறுவன் வறுமையின் காரணமாக சாலைகளில் சாக்ஸ் விற்றுக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவனிடம் சாக்ஸ் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் அவனுக்கு கூடுதலாக ரூ.50 வழங்க முற்பட்டபோது அந்தச் சிறுவன் அதைப் பெற மறுத்துவிட்டார்.
இதையெல்லாம் வீடியோவாக எடுத்த நபர் அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலானது. இது பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் கவனத்துக்குச் சென்றது.
உடனே அச்சிறுவனைப் பற்றி அதிகாரிகளை விசாரிக்க உத்தரவிட்டார் முதல்வர். பின்னர், அச்சிறுவனுடன் தொலைபேசியில் வீடியோ கால் மூலம் பேசினார்.
அந்தத் சிறுவனின் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். மேலும், சிறுவனின் கல்விச் செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்கும் என்றும் உறுதியளித்தார். மாவட்ட ஆட்சியர் உதவியுடன் வன்ஷ் சிங் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வறுமையிலும் சிறுவன் காட்டிய நேர்மையும், சுயமரியாதையும் தன்னை ஈர்த்ததாக முதல்வர் தெரிவித்தார். சிறுவனின் தந்தையும் சாக்ஸ் விற்பனையே செய்கிறார். தாயார் இல்லத்தரசி. சிறுவன் வன்ஷ் சிங்குக்கு ஒரு மூத்த சகோதரரும், மூன்று சகோதரிகளும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT