Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
பயிற்சி பெற்ற மருத்துவர்களை கரோனா சிகிச்சையில் பயன்படுத்த வேண்டும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கான சுற்றறிக்கையை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நேற்று அனுப்பியுள்ளது.
நாடு முழுவதிலும் இரண்டாவது அலையாகப் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் மாநிலங்களுக்கு உதவி வருகிறது. தேசிய பேரிடர் நிர்வாக நிதியை ஆயுஷ் அமைச்சகம் பெற்று மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கிறது. இவை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தலா ரூ.2 கோடி வரை ஒதுக்கப்படுவது தெரியவந்துள்ளது. மாநிலங்கள் தம் ஆயுஷ் துறையின் சார்பில் துவக்கி நடத்தி வரும் தன்னார்வ கரோனா சிகிச்சை மையங்களுக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் உதவி வருகிறது.
இந்த வகையில், நேற்று அதன் சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், நாடு முழுவதிலும் சுமார் எட்டு லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் இருப்பதாகவும், பயிற்சி பெற்ற இவர்களை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தி உள்ளது.
இதுவரையில் நாடு முழுவதிலும் உள்ள 750 ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 50,000 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகமும் உதவி இருப்பதாகக் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் கரோனா பரவத் துவங்கிய போதும் ஆயுஷ் துறையினர் அதன் சிகிச்சையில் ஈடுபட்டனர். இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் குணமடைந்தனர். இரண்டாவது பரவலில் அன்றாடம் சுமார் 25,000 தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டும், குணமாகியும் வருகின்றனர். நாடு முழுவதிலும் ஆயுஷ் மருத்துவத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் 28,473 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கத்தின் துணை தலைவரான டாக்டர் சவுந்தரபாண்டியன் கூறும்போது, ‘கரோனா சிகிச்சையை பொறுத்தவரை ஆயுஷ் மற்றும் அலோபதி மருத்துவர் என அனைவரும் ஒன்று தான். ஆயுஷ் முறையிலான யோகா, மூச்சுப்பயிற்சி, ஆவி பிடித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை தான் அலோபதி மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கிறார்கள். கரோனா பரவல் சூழலில் எங்களது உயிரை பணயம் வைத்து தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால், அலோபதி மருத்துவர்களுக்கு ரூ.1.25 லட்சம் அளிக்கும் அரசு, எங்களுக்கு அளிக்கும் வெறும் ரூ.25,000 ஊதியத்தை உயர்த்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இந்த குறைந்த ஊதியத்திற்கு ஆயுஷ் மருத்துவர்கள் நிரந்தர பணியில் இல்லாமல் இருப்பதும் காரணம். இவர்களுக்கான பல ஆயிரக்கணக்கிலான பணி நாடு முழுவதிலும் நிரப்பப்படாமல் உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 500 மருத்துவர்களுக்கானப் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT