Last Updated : 30 Dec, 2015 02:37 PM

 

Published : 30 Dec 2015 02:37 PM
Last Updated : 30 Dec 2015 02:37 PM

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விசாரணையை முடக்க முயன்றது ஏன்?- ஜேட்லிக்கு ஆம் ஆத்மியின் 5 கேள்விகள்

மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி இருந்த போது, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் புகார்கள் மீதான விசாரணைகளை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக அவர் எழுதிய கடிதங்களை சாட்சியமாக காட்டியுள்ளது ஆம் ஆத்மி.

2013-ம் ஆண்டு வரை அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக திகழ்ந்துள்ளார். அக்டோபர் 27, 2011-ல் டெல்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தாவுக்கு அருண் ஜேட்லி எழுதிய கடிதம் ஒன்றில் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீதான விசாரணையை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக ஆம் ஆத்மி கடிதம் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் முன்னிலையில் ஆம் ஆத்மி காண்பித்த கடிதத்தில், டெல்லி கிரிக்கெட் சங்கம் எந்த வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை எனவே விசாரணையை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அப்போது டெல்லி சிறப்பு காவல்துறை கமிஷனராக இருந்த ரஞ்ஜித் நாராயணுக்கு மே 5, 2012-ல் எழுதிய மற்றொரு கடிதத்தில் டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகளை விசாரிப்பதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

“புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. மேலும் எந்த வித முறைகேடும் நடந்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து கேள்வி கேட்டு நச்சரிப்பதாக டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சங்கடப்படுகின்றனர்” என்று கடிதத்தில் அப்போது ஜேட்லி கூறியுள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி தலைவர் அசுடோஷ் கூறும்போது, “எனவே ஆவணபூர்வமாகப் பார்க்கும் போது, விசாரணையில் ஜேட்லி தலையிட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. செயல்முறையல்லாத டிடிசிஏ தலைவராக டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் அன்றாட அலுவல்களில் தான் தலையிடவில்லை என்று ஜேட்லி கூறிவருகிறார், ஆனால் அப்படியான பதவி இல்லை என்பதோடு, விசாரணையில் தலையிட்டு அதனை முடிக்கவும் முயன்றுள்ளார் ஜேட்லி” என்று சாடினார்.

எனவே டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகளை அருண் ஜேட்லி அறிந்தேயிருக்கிறார் என்று கூறிய ஆம் ஆத்மி மேலும் 5 கேள்விகளை அவரிடம் எழுப்பியுள்ளது:

1. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியைப் பயன்படுத்தி டெல்லி போலீஸுக்கு அவர் நெருக்கடி கொடுத்தாரா?

2. அவரே ஒரு வழக்கறிஞராக உள்ள போது, விசாரணையை அவர் தலையிட்டு முடித்து வைக்க டெல்லி போலீஸின் பணிகளில் குறுக்கீடு செய்துள்ளார் என்பதை அவர் மறுக்க முடியுமா?

3. சிண்டிகேட் பேங்க் கிரிக்கெட் கிளப் மீதான புகார்களை நிரூபிக்கப்படாத ஒன்று என்றும் முறைகேடுகள் நடைபெறவில்லை என்றும் அவர் எந்த அடிப்படையில் அவர் கூறுகிறார்?

4. இந்நிலையில், நடப்பு மத்திய அரசில் அமைச்சராக அருண் ஜேட்லி தொடர நியாயமிருக்கிறதா? குறிப்பாக டெல்லி போலீஸ் மத்திய அரசின் கீழ் இருக்கும் போது அவர் அமைச்சராக நீடிப்பது நியாயமா?

5. விசாரணையை முடக்குவதற்கான அவரது ஆர்வம் எத்தகையது?

ஆகிய கேள்விகளை ஆம் ஆத்மி எழுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x