Published : 07 May 2021 04:26 PM
Last Updated : 07 May 2021 04:26 PM
''கரோனா வைரஸ் பரவலைக் கையாள்வதில் நாட்டின் நிர்வாக அமைப்பு முறை எதுவும் தோல்வி அடையவில்லை. இந்த தேசத்தின் மக்களிடம் மோடி அரசுதான் தோற்றுவிட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்'' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று காணொலி மூலம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:
''மக்கள் மீது எந்தவிதமான கருணையும் இல்லாத அரசியல் தலைமையின் கீழ் நாடு முடங்கிக் கிடக்கிறது. கரோனா வைரஸுக்கு எதிரான போரில் அனைத்துக் கட்சிகளும் கட்சி வேறுபாட்டை மறந்து, தேசத்துக்காக ஒன்றாக இணைந்து போராட வேண்டும்.
கரோனா வைரஸ் சூழல் குறித்துப் பேச உடனடியாக நிலைக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா சூழலைச் சிறப்பாகக் கையாள நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. கரோனா வைஸ் சூழலைக் கையாள்வதில் நாட்டின் நிர்வாக அமைப்பு முறை எதுவும் தோல்வி அடையவில்லை. மோடி அரசுதான் இந்தியாவின் பலவிதமான வலிமைகளையும், வளங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படாமல் மக்களிடம் தோற்றுவிட்டது.
கரோனாவுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான போர் அல்ல, கரோனாவுக்கும் நமக்கும் இடையே நடக்கும் போர்தான் என காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. மோடி அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி கரோனா சூழல் குறித்து விவாதிக்க வேண்டும்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடனடியாக நிலைக்குழு அதிகாரியிடம் மனு அளித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுகாதாரத்துக்கான நிலைக்குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோர வேண்டும். தாமதப்படுத்தும் சூழல் இல்லை.
இந்தச் சிக்கலைக் கையாள திறமையான, அமைதியான, தொலைநோக்கு எண்ணம், பார்வை கொண்ட தலைமை அவசியம். மோடி அரசின் அலட்சியம் மற்றும் திறமையின்மை காரணமாக இந்த தேசம் மூழ்கி வருகிறது. மக்களுக்குச் சேவை செய்ய இதுதான் சரியான நேரம்.
கரோனா வைரஸ் பரவலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அடிப்படை மருத்துவ வசதிகள் இன்றியும், உயிர் காக்கும் மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் தங்கள் அன்புக்குரியவர்களின் உயிரைக் காக்க மக்கள் போராடுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளுடன் மருத்துவ உதவிக்காக மக்கள் நீண்ட தொலைவில் காத்திருக்கிறார்கள். மோடி அரசு என்ன செய்கிறது? மக்களின் துன்பத்தையும், வலியையும் போக்காமல், தங்களின் அடிப்படை பொறுப்புகளையும், கடமைகளையும் மத்திய அரசு துறந்துவிட்டது''.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...