Published : 07 May 2021 02:52 PM
Last Updated : 07 May 2021 02:52 PM
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கிறது என அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேதனைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுக் கூட்டம் இன்று தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கரோனா வைரஸ் பரவல், அரசின் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சமீபத்தில் கேரளா, தமிழகம், புதுச்சேரி, அசாம், மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பெரிதாக வாக்கு வங்கி வீதத்திலும், வென்ற இடங்கள் எண்ணிக்கையிலும் பெரிதாக சாதிக்கவில்லை. 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மோசமாகவே இருந்தது.
அதிலும் மே.வங்கத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலி்ல் ஒரு இடத்தில் கூட வெல்லவி்ல்லை. கேரளாவிலும், அசாமிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி தவறவிட்டது
இந்த தேர்தல் தோல்வி குறித்து எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியுள்ளார்.அப்போது, “ சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கட்சியின் செயல்பாடுகள் மிகவும் வருத்தமளிக்க வைக்கிறது. எதிர்பார்த்திராத முடிவாக இருக்கிறது
.இந்த தேர்தல் முடிவுகள் குறித்து விரைவில் ஆய்வு செய்வோம். காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் விரைவில் தேர்தல் முடிவு பற்றி விவாதிக்கப்படும். ஆனால், இந்த தேர்தல் தோல்வியிலிருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பதை பணிவுடன், நேர்மையுடன் ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேற்குவங்க தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சோனியா காந்தி வாழ்த்துத் தெரிவித்தார். கேரளா, தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்ட இடதுசாரிகளுக்கும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT