Published : 07 May 2021 02:18 PM
Last Updated : 07 May 2021 02:18 PM
மத்திய அரசு கரோனாவைக் கையாள்வதில் தோல்வியுற்றதால் , தேசிய அளவில் மற்றொரு லாக்டவுன் வருவது தவிர்க்க முடியாதது. ஏழைகள், எளிய மக்களுக்கு நிதியுதவியும், உணவும் இலவசமாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களை பாடாய்படுத்தி வருகிறது, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 4.14 லட்சம்பேர் பாதிக்கப்பட்டனர், 3,900க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
பல்வேறு நகரங்களில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசித் தட்டுப்பாடு, மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. பல்வேறு மாநிங்களி்ல் விரைவாக அதிகரித்து வரும் கரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதி சில அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் குறித்தும், தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்தும் உங்கள் அரசுக்கு தெளிவான கண்ணோட்டம் இல்லை. கரோனாவை வென்றுவிட்டோம் என முன்கூட்டியே முழக்கமிட்டீர்கள், ஆனால், வைரஸ் அளவுக்கு அதிகமாக பரவி, இந்தியாவை ஆபத்தான நிலையில் வைத்துள்ளது,
இன்று கட்டுக்கடங்காமல் கரோனா வளர்ந்து வருகிறது. தற்போது நம்முடைய அனைத்து அமைப்புகளையும் சிக்கலில் கொண்டு வந்து கரோனா நிறுத்தியுள்ளது. மத்திய அரசின் தோல்வியடைந்த நடவடிக்கையால், இந்த தேசம் 2-வது முறையாக தேசிய அளவில் ஊரடங்கை தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறது.
இந்த லாக்டவுனுக்காக மக்கள் தயாராக இருப்பார்கள் என்பது கடினமானது. ஆதலால், ஏழை மக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் அரசு நேரடியாக ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கிட வேண்டும்.
கடந்த ஆண்டு லாக்டவுனில் ஏற்பட்ட பாதிப்பைப் போல் ஏற்படாமல் தடுக்க, மத்திய அரசு கருணையுடன் மக்களிடம் நடக்க வேண்டும். குறிப்பாக விளிம்புநிலை மக்களுக்கும், ஏழைகளுக்கும் நிதியுதவியும், உணவும் வழங்க வேண்டும்.
இந்த கரோனா வைரஸ் சுனாமி தொடர்ந்து நாட்டை அழித்து வருகிறது. இதுவரை கண்டிராத இந்த சூழிலில் உங்களின் மிகமுக்கியமான முன்னுரிமை என்பது மக்களாகத்தான் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
எங்கள் மக்கள் அனுபவிக்கும் தேவையற்ற துன்பங்களைத் தடுத்த நிறுத்த உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்தையும் செய்யுங்கள் என வலியுறுத்துகிறேன்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி, அனைத்து உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக அனைத்து தடுப்பூசிகளும் எவ்வாறு திறம்படச் செயல்படுகின்றன என்பதையும் ஆராய வேண்டும்
நாடுமுழுவதும் கரோனா வைரஸ் எவ்வாறு உருமாறுகிறது என்பதை அறிவியல் வல்லுநர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும், அதன் மரபணு மாற்றம், வரிசை ஆகியவற்றையும், நோயை ஏற்படுத்தும் தன்மையையும்ஆராய வேண்டும்.
அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் இருந்து, உலகிற்கு நம்முடைய கண்டுபிடிப்புகள் தெரியப்படுத்த வேண்டும். லாக்டவுன் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கவலைப்படுவது தெரியும். இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் இந்த வைரஸை அனுமதிப்பதால் மனிதர்களுக்கு கொடுக்கும் விலை என்பது உங்களின் பொருளாதார ஆலோசகர்கள் அளிக்கும் பொருளாதார கணக்கீடுகளை விட மோசமானதாக இருக்கும்
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT