Published : 07 May 2021 11:36 AM
Last Updated : 07 May 2021 11:36 AM
உத்தரப்பிரதேசப் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் நேற்று முழுவதுமாக வெளியாகி உள்ளன. இங்கு ஆளும் பாஜகவிற்கு நான்கு முக்கிய மாவட்டங்களான அயோத்யா, வாரணாசி, மதுரா மற்றும் கோரக்பூரில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இடையே உ.பி.யின் கிராமங்களுக்கு பஞ்சாயாத்து தேர்தலும் நடைபெற்றது. ஏப்ரல் 15 இல் துவங்கி நான்கு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2 இல் துவங்கியது.
இவை நேற்று முழுவதுமாக வெளியாகி உள்ளன. இந்த தாமதத்திற்கு அவை பழைய முறையின் வாக்குச்சீட்டுகளில் தேர்தலில் நடைபெற்றது காரணம்.
இதில் உ.பி.யின் ஆளும் பாஜகவிற்கு எதிர்பார்காத அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உ.பி.யின் மொத்தம் உள்ள 75 மாவட்டங்களின் 3,050 கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களில் பாஜகவிற்கு 768 கிடைத்துள்ளது.
எதிர்கட்சிகளில் அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி(எஸ்பி) 759, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி(பிஎஸ்பி) 319, காங்கிரஸ் 125, ராஷ்டிரிய லோக் தளம் 69 மற்றும் சுயேச்சைகளுக்கு 1,071 பெற்றுள்ளன.
இவற்றில் பாஜக முதலிடத்தில் இருந்தாலும் இம்மாநிலத்தின் மூன்று முக்கிய மாவட்டங்களாக அயோத்யா, வாரணாசி, மதுரா மற்றும் கோரக்பூரில் மிகக்குறைந்த உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். இந்த நான்கும் பாஜகவின் செல்வாக்கு மிக்கவையாகக் கருதப்படுகின்றன.
பிரதமர் நரேந்தர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியின் 40 உறுப்பினர்களில் பாஜகவிற்கு வெறும் எட்டு கிடைத்துள்ளது. எஸ்பி 14, பிஎஸ்பி 5, அப்னா தளம் எஸ் பிரிவு 3 பெற்றதுடன் ஆம் ஆத்மி கட்சியும் ஒன்று பெற்று உபியில் தன் கணக்கை துவக்கி உள்ளது.
அயோத்யாவின் 40 உறுப்பினர்களுக்கானப் பதவிகளில் பாஜகவிற்கு ஆறு கிடைத்துள்ளது. இங்கு எஸ்பி 24 மற்றும் பிஎஸ்பி 5 பெற்றுள்ளன. மதுராவின் 33-ல் பாஜகவிற்கு 8, பிஎஸ்பி 12, எஸ்பி 4 மற்றும் ஆர்எல்டி 9 இல் வெற்றி பெற்றுள்ளன.
முதல்வர் யோகி ஆதியத்யநாத்தின் மாவட்டமான கோரக்பூரின் 68 இல் 20 மட்டும் பாஜகவிற்கு கிடைத்துள்ளது. எஸ்பி 19 மற்றும் சுயேச்சைகள் 21 பெற்றுள்ளன.
உ.பி.யின் கிழக்கு பகுதி மாவட்டங்களான பலியா, ஆசம்கர், சோன்பத்ர் மாவ், பஸ்தி, மீர்சாபூர், பதோஹி மற்றும் சண்டவுலியிலும் பாஜகவிற்கு குறைந்த உறுப்பினர்களுடன் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதில் தேர்வானவர்கள் உ.பி.யின் மேல்சபைக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.
எனவே, இதன் பாதிப்பு பாஜகவிற்கு அதன் மேல்சபையில் ஏற்படும். அடுத்து 2022 இல் வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவையின் தேர்தலிலும் பாஜகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனாவின் இரண்டாவது பரவிலின் இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் சராசரியாக 75சதவிகிதம் வாக்குப்பதிவு இருந்தது. இதன் தேர்தல் பணியின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும், ஆயிரத்திற்கும் அதிகமான கரோனா தொற்றும் ஏற்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT