Published : 06 May 2021 03:12 PM
Last Updated : 06 May 2021 03:12 PM
கரோனா வைரஸ் 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், அதைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை சப்ளை செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை மத்திய அரசு அதிகாரிகள் நிறைவேற்றாததால், மத்திய அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குத் தடை கோரி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை சப்ளை செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எம்ஆர் ஷா ஆகியோர் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்த அறிக்கையில், டெல்லிக்கு 740 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளதாகவும், டெல்லியில் உள்ள 56 மருத்துவமனைகளை ஆய்வு செய்ததில், அங்கு போதுமான ஆக்சிஜன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “நீங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான திட்டம் வகுக்கும்போது இருந்த நிலைக்கும், இப்போதும் மாறுபட்டிருக்கும். படுக்கைகள் எண்ணிக்கை, ஐசியூ பயன்பாடு, ஆக்சிஜன் தேவை ஆகியவை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். அப்போது எடுத்த கணக்கின்படி ஒவ்வொருவருக்கும் ஆக்சிஜன் தேவைப்பட்டிருக்காது.
ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. ஆதலால், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் தேவை, படுக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து நாடு முழுவதும் முழுமையாகத் தணிக்கை செய்ய வேண்டும்.
நாட்டில் கரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவும் எனத் தகவல் வந்துள்ளது. 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் எனக் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு உடல்நலமில்லாமல் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றால் உடன் பெற்றோரும் செல்ல வேண்டியதிருக்கும். ஆதலால், தடுப்பூசியை இந்தப் பிரிவு மக்களுக்கு முடிக்க வேண்டும்.
மூன்றாவது அலை வந்தால், அதை எப்படிக் கட்டுப்படுத்துவீர்கள். மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இல்லாவிட்டால் என்ன மாற்று வைத்துள்ளீர்கள்” எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய அரசு வழக்கறிஞர், “உச்ச நீதிமன்றம் வழிகாட்டினால் பின்பற்றுவோம்” எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT