Published : 06 May 2021 12:55 PM
Last Updated : 06 May 2021 12:55 PM
கேரளாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி, முதல்வர் பினராயி விஜயன் இன்று அறிவித்தார்.
இந்த 9 நாட்கள் லாக்டவுன் மே 8ஆம் தேதி காலை தொடங்கி, மே 16ஆம் தேதிவரை நீடிக்கும். கேரளாவில் கடந்த 4ஆம் தேதியிலிருந்து மினி-லாக்டவுன் நடைமுறையில் இருந்தாலும், இது முழுமையான லாக்டவுனாக இருக்கும்.
மினி-லாக்டவுனில் நடைமுறைப்படுத்தியபின் ஏற்பட்ட தாக்கம் குறித்து போலீஸார் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அளவை மீறிச் செல்லத் தொடங்கியதைத் தொடர்ந்து முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மட்டும் 41,953 பேர் பாதிக்கப்பட்டனர், 58 பேர் உயிரிழந்தனர்.
இதில் மிக மோசமாக எர்ணாகுளம், கோழிக்கோடு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் 50 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளத்தில் 58 ஆயிரம் பேரும், கோழிக்கோட்டில் 50 ஆயிரம் பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.
திருவனந்தபுரம் (31 ஆயிரம்), பாலக்காடு (26 ஆயிரம்), கண்ணூர் (24 ஆயிரம்), ஆலப்புழா (22 ஆயிரம்) ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளா முழுவதும் மருத்துவமனைகளில் 3.80 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 2033 நோயாளிகள் ஐசியூ அறையிலும், 818 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சையும் தேவைப்படுகிறது.
ஆனால், டெல்லியில் ஏற்பட்டநிலைமை கேரளாவில் ஏற்படவில்லை. கேரளாவில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள், ஐசியூ அறை ஆகியவற்றுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை.
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் 30 மாவட்டங்கள் குறித்த மத்திய அரசின் பட்டியலில் கேரளாவின் 10 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கேரள அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு, மாநிலத்தில் கரோனா அதிகரிப்பதால், 2 வாரங்களாவது முழு ஊரடங்கு செயல்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இப்போது அரசு 9 நாட்கள் முழு லாக்டவுனை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT