Published : 06 May 2021 12:23 PM
Last Updated : 06 May 2021 12:23 PM

கரோனா வைரஸ் பாதிப்பால் தொழிலாளர்களின் சராசரி வருமானம் 17 சதவீதம் குறைந்தது: ஆய்வில் தகவல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தாக்கத்தால் தொழிலாளர்களின் சராசரி மாத வருமானம் 17 சதவீதம் குறைந்துள்ளது என அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்புக்கான பிரிவு கரோனா காலத்தில் வேலையின்மை, தொழிலாளர்கள் நிலை, வருமானம், ஏழ்மை, சமத்துவமின்மை ஆகியவை குறித்து இந்தியாவில் பணிபுரிவோர் நிலை 2021- கரோனா ஓர் ஆண்டு என்ற தலைப்பில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மார்ச் 2020 முதல் டிசம்பர் 2020ம் ஆண்டு காலத்தை மட்டும் ஆய்வு செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு மே மாதம் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் நடவடிக்கையால் நாடுமுழுவதும் 10 கோடிபேர் வேலைவாய்ப்பை இழந்தனர். ஆனால், அந்த வேலையிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஜூன் மாதத்தில் மீண்டும் வேலையில் சேர்ந்தனர்,

ஆனால், ஏறக்குறைய 1.50 கோடி பேருக்கு இன்னும் வேலைகிடைக்கவில்லை. வருமானத்தைப் பொருத்தவரை 4 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் மாத தனிநபர் வருமானம் கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.5,989 ஆக இருந்தது. ஆனால் லாக்டவுன் நடவடிக்கைக்குப் பின், ரூ.4,979 ஆகக் குறைந்து, மாத சராசரி வருமானம் 17 சதவீதம் குறைந்துள்ளது.

லாக்டவுன் நடவடிக்கைக்குப்பின், ஊதியம் பெறும் பிரிவில் இருக்கும் பணியாளர்களில் பாதிப்பேர், அமைப்புசாரா தொழிலுக்கும், 30 சதவீதம் பேர் சுயதொழிலுக்கும், 10 சதவீதம் பேர் கூலி வேலைக்கும், 9 சதவீதம் பேர் அமைப்பு சாரா கூலி வேலைக்கும் சென்றுவிட்டனர். இந்த விகிதம் மதம் மற்றம் சாதிக்கு ஏற்றார்போல் மாறுபடுகிறது.

மாதசராசரி ஊதியஇழப்பில் சுயதொழில புரிவோர், அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியோர்தான் அதிகமான ஊதியஇழப்பைச் சந்தி்த்தனர்.

அதிலும் ஏழை மக்களின் வருமானம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஏழை மக்கள் பிரிவில் 20 சதவீதம் பேர் 2020 ஏப்ரல் மே மாதங்களில் முழுமையான வருமானத்தை இழந்தனர். பணக்காரர்கள் தரப்பில் வருமான இழப்பு என்பது கரோனாவுக்கு முன்பு ஒப்பிடும்போது சிறிது குறைவாகவ இருந்தது. 2020 மார்ச் முதல் அக்டோபர்வரை, சராசரி குடும்பத்தின் வருமானம் 10 சதவீதம் அல்லது ரூ.15,700 ஆகக் குறைந்துள்ளது .

கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த மாநிலத்துக்கும், அங்கு ஏற்பட்ட வேலையிழப்புக்கும் இடையே அதிகமான தொடர்பு இருக்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, டெல்லியில் அதிகமான கரோனா பாதிப்பும், வேலையிழப்பும் இருந்தது.

இந்த கரோனா காலகட்டத்தில் பெண்கள், இளம்வயதில் வேலைபார்க்கும் பிரிவினர் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். லாக்டவுனுக்குப்பின் 61சதவீத தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை, 7 சதவீதம் பேர் வேலையை இழந்துள்ளனர்.

பெண்கள் பிரிவி்ல் 19 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை, 47சதவீதம் பேர் நிரந்தமாக வேலை இழந்துள்ளனர். 15 வயது முதல் 24 வயதுக்குள் இருக்கும் தொழிலாளர்களில் 33 சதவீதம் பேருக்கு 2020 டிசம்பர் வரை வேலை கிடைக்கவில்லை. 25 வயதுமுதல் 44 வயதுள்ளவர்களில் 6 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவி்ல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x