Published : 06 May 2021 11:34 AM
Last Updated : 06 May 2021 11:34 AM
இந்திய மக்களை உலுக்கி எடுத்துவரும் கரோனா வைரஸ் 2-வது அலை எப்போது குறையத்தொடங்கும் என்று பிரபல வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் கணித்துள்ளார்.
இந்திய மகளிர் பத்திரிகையாளர்கள் குழுவுடன் வைரலாஜிஸ்ட் ககனதீப் காங் காணொலியில் உரையாடினார். தற்போது பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகளின் கரோனா தொற்று தடுப்புக் குழுவின் ஆலோசகராக ககன்தீப் காங் செயல்பட்டுவருகிறார்.
இந்த கலந்துரையாடலில் ககன்தீப் காங் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது மிகவும் தீவிரமாக இருக்கும் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை மே மாதம் நடுப்பகுதி அல்லது இறுதியிலிருந்து படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று கணித்துள்ளோம்.
சில மாடல்கள், ஜூன் மாதம் முதல்வாரத்திலிருந்துதான் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என்று கணித்துள்ளன. ஆனால், சில காரணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் நாங்கள் கணித்த வகையில் மே மாதம் நடுப்பகுதி அல்லது இறுதியிலிருந்து பாதிப்பு படிப்படியாக சரியத் தொடங்கும்.
தற்போது இந்தியர்களுக்கு கிடைத்திருக்கும் கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே கரோனா தொற்றுக்கு எதிராகச் சிறப்பாக செயல்படுகின்றன, நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன, நோய் தொற்று ஏற்படுவதிலிருந்து பெரும்பாலும் காக்கின்றன. நீங்கள் வைரஸில் பாதிக்கப்படுவதிலிருந்து உங்களை காத்துக்கொண்டாலே, மற்றவர்களுக்கு உங்களால் நோயை பரப்பமுடியாது. ஆதலால் இந்த இரு தடுப்பூசிகளும் கரோனாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுகின்றன, இறப்பு வீதத்தையும் கட்டுப்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு கரோனா முதல் அலையிலிருந்து தப்பிய நடுத்தரவகுப்பினர், கிராமப்புறத்து மக்கள் இந்த 2-வது அலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இந்தியாவில் உச்சமடைந்துள்ள கரோனா தொற்று முன்பு இருந்த அளவைவிட மூன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது. நாம் கரோனா வரைஸ் பாதிப்பு குறையத் தொடங்கும்போது, கரோனா வைரஸ் பரவலும் இயல்பான வேகத்துக்கு வந்துவிடும், படிப்படியாகக் குறைந்துவிடும். கரோனா பரிசோதனையின் அளவைக் குறைத்தபோதிலும்கூட நாம் உச்சகட்டத்தை அடைந்துவிடுகிறோம், நாள்தோறும் ஏறக்குறைய 4 லட்சம்பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்
இப்போதுள்ள சூழலில் கரோனா வரைஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுன் சிறப்பாக உதவும். இப்போது இருந்து சில வாரங்கள் லாக்டவுன் அமல்படுத்தினால், அடுத்த 3 வாரங்களில் கரோனா தொற்று குறைந்துவிடும். ஆனால், அதைத் தாங்க முடியுமா என்பதுதான் கேள்வி. நாம் தீவிரமான லாக்டவுனை அமல்படுத்தும்போது, அதாவது கடந்த ஆண்டு லாக்டவுனை அமல்படுத்தியபோது, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும் உடன் பயணித்தது.
லாக்டவுன் அமல்படுத்தும்போது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை வராது, மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், பாதுகாப்பான தங்குமிடம் இருக்கும், மனிதஉரிமை மீறல்கள் இருக்காது, அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்று உறுதியளித்தால் நிச்சயம் தீவிரமான லாக்டவுனை அமல்படுத்தலாம்.
இவ்வாறு ககன்தீப் காங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT