Published : 05 May 2021 09:15 AM
Last Updated : 05 May 2021 09:15 AM

நந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் தொடரக்கூடாது: திரபுரா முதல்வர் கடும் தாக்கு

அகர்தலா

நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் அமரும் தகுதியை இழந்து விட்டார் என திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் விம்ரசித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று அசுரபலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது.

தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் போட்டியளித்த பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. மாநிலத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் முதல்வர் மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளார்.

முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கள் மீது ஆளும் திரிணாமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இத்தாக்குதலில் பாஜக கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் என 12 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து நாடு முழுவதும் பாஜக சார்பில், அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் பின்பற்றி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் மேற்குவங்கத்தில் நடந்து வரும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவத்தை கண்டித்து திரிபுரா மாநிலம் அகர்தலாவில் முதல்வர் பிப்லப் தேவ் குமார் தலைமையில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மேற்குவங்க மாநிலத்தின் பல பகுதிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக தொண்டர்கள் பலர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி ஆதரவாளர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ளனர். இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜியே பொறுப்பேற்க வேண்டும்.

மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்து விட்டார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எப்படி முதல்வராக முடியும். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேறு ஒருவரே முதல்வர் பதவியில் அமர வேண்டும். முதல்வர் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை மம்தா இழந்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x