Last Updated : 05 May, 2021 03:12 AM

7  

Published : 05 May 2021 03:12 AM
Last Updated : 05 May 2021 03:12 AM

குடிசையில் வசிக்கும் மேற்கு வங்க பாஜக பெண் எம்எல்ஏ : 3 ஆடுகள், ரூ.6,335 ரொக்கம்தான் சொத்து

சந்தனா பவுரி (நடுவில்)

புதுடெல்லி

மேற்கு வங்க தேர்தலில் கூலித்தொழிலாளியின் மனைவி பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்னமும் குடிசையில்தான் வசித்து வருகிறார். மிகவும் பிற்படுத்தப்பட்டவரான இவர் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியை மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர விடமாட்டோம் என சூளுரைத்த பாஜகஇந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.

எனினும், இதன் வேட்பாளர்களில் ஒருவரான சந்தனா பவுரிபலரது கவனத்தையும் கவர்ந்துள்ளார். அவர் இந்தத் தேர்தலில்வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ளார்.

கூலித் தொழிலாளியின் மனைவியான அவர் இன்னமும் குடிசையில் வாழ்வதே இதற்கு காரணம். தனது கணவருடன் சேர்த்து சந்தனாவும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் தனித்தொகுதிகளில் ஒன்றான சால்தோராவில் சந்தனா போட்டியிட்டிருந்தார். கங்கை கரையில் அமைந்துள்ள கிராமமான கேலாயில் சந்தனா வசித்து வருகிறார். கடந்த ஏழு வருடங்களாக பாஜகவின் தீவிரத் தொண்டராக இருந்து வரும் சந்தனா, அப்பகுதியில் நடைபெறும் பாஜக கூட்டங்களில் அழைக்காமலேயே வந்து தொண்டுசெய்துள்ளார். இதனால் அவர்,பாஜகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது, சந்தனாவிடம் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் மண்டல் தோல்வி அடைந்துள்ளார். சொத்து எனும் பெயரில் சந்தனாவிடம் மூன்று ஆடுகள் மட்டுமே உள்ளன. அவரது வங்கிக் கணக்கில் ரூ.6,335 உள்ளது. தனது வீட்டில் கழிவறை கூட இல்லாதவரை பாஜக மேலிடம், சால்தோரா தொகுதியில் வேட்பாளராக்கியது. இங்கிருந்து தனது பிரச்சாரத்திற்காக காவி நிறச் சேலை அணிந்து நாள்தோறும் சந்தனா தனியாகவே சென்று வந்துள்ளார்.

இவரது வெற்றி மேற்கு வங்கத்தில் பலரையும் வியக்க வைத்துள்ளது. துவக்கத்தில் வேறு வேட்பாளர் கிடைக்காததால் பாஜக, சந்தனாவிற்கு வாய்ப்பளித்ததாகக் கூறப்பட்டது. எனினும், இந்த தொகுதியில் பாஜகவில் போட்டியிட பல பணக்காரர்களும் முயற்சி செய்ததாகத் தெரிகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களில் மிகவும் ஏழ்மையானவராகவும் சந்தனா பவுரி கருதப்படுகிறார். இதுவரை எந்த ஒரு பஞ்சாயத்து தேர்தலிலும் போட்டியிடாத சந்தனாவிற்கு நேரடியாக மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x