Published : 04 May 2021 05:10 PM
Last Updated : 04 May 2021 05:10 PM
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் நடத்தப்பட்டுவரும் ஐபிஎல் டி20 தொடரை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் வந்தனா ஷா என்பவர் இந்தப் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திபன்கர் தத்தா, ஜிஎஸ் குல்கர் ஆகியோர் விரைவாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வந்தனா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், ஐபிஎல் டி20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விருதிமான் சாஹா, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
பாதுகாப்பான பயோ-பபுள் சூழலுக்குள் வீரர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது பெரும் கவலைக்குரியதாக மாறியதால், ஐபிஎல் தொடரைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து பிசிசிஐ இன்று அறிவித்தது.
இந்தச் சூழலில் இந்தப் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
“நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஐபிஎல்டி20 போட்டிகள் நடத்தப்பட்டு வருவது சரியானது அல்ல.
பயோ-பபுள் சூழலைவிட்டு கொல்கத்தா அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் விலகியதையடுத்து, அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சில அணிகளின் மற்ற உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் திங்கள்கிழமை நடக்க வேண்டிய போட்டி ரத்து செய்யப்பட்டது.
இப்போது ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மும்பை வான்ஹடே மைதானத்துக்கும், நவிமும்பையில் உள்ள பாட்டீல் மைதானத்துக்கும் மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முயல்கிறது.
ஐபிஎல் போட்டிகள் நடத்தப் பயன்படும் தொகை அனைத்தும் கரோனா நோயாளிகள் நலனுக்காகச் செலவிடப்பட வேண்டும். ஐபிஎல் அத்தியாவசியச் சேவையா. ஐபிஎல் தொடரால் ஏற்பட்ட சேதத்துக்கு ரூ.1000 கோடி இழப்பீடாக பிசிசிஐ வழங்க வேண்டும், கரோனா நோயாளிகளின் மருத்துவ வசதிக்காகவும் நன்கொடை வழங்கிட வேண்டும். இதுபோன்ற பதற்றமான நேரத்தில் ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐக்கு என்ன பொறுப்பிருக்கிறது?” எனத் தெரிவி்த்தார்.
இந்த மனு குறித்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திபன்கர் தத்தா, ஜிஎஸ் குல்கர் ஆகியோர் கூறுகையில், “மும்பையில் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டு இருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. இந்த மனுவை வரும் 6-ம் தேதி விசாரிக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT