Published : 03 May 2021 05:34 PM
Last Updated : 03 May 2021 05:34 PM
கேரள சட்டப்பேரவையில் 20 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் 11 பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கடைசியாக 1996ஆம் ஆண்டு 13 பெண் எம்எல்ஏக்கள் இருந்தனர். அதன்பின் இப்போதுதான் அதிகபட்சமாகும். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி சார்பில் 10 பெண் எம்எல்ஏக்களும், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி சார்பில் ஒரு பெண் எம்எல்ஏவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
140 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 103 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 11 பெண்களே சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைக்கின்றனர். 2016-ம் ஆண்டில் 8 பெண் எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் பெண்களுக்கு அதிகமான முன்னுரிமை அளிக்கப்பட்டதில் கூடுதலாக 3 பெண்கள் எம்எல்ஏக்களாக வந்துள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் ஆதரவைப் பெற்ற வடகரையில் இருந்து போட்டியிட்ட கே.கே.ரேமா மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.பி.சந்திரசேகரனின் மனைவி ரேமா. சந்திரசேகரன் 2012-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் தொண்டர்களால் கொல்லப்பட்டார். அதற்குப் பழிதீர்க்கும் வகையில் இந்தத் தேர்தலில் ரேமா போட்டியிட்டு வென்றுள்ளார்.
இது தவிர இடதுசாரிகள் தரப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஷா மட்டணூர் தொகுதியில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2-வது முறையாக வீணா ஜார்ஜ், சி.கே. ஆஷா, யு.பிரதிபா ஆகியோர் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மீன்வளத்துறை அமைச்சர் மெர்ஸிகுட்டி அம்மா, பி.கே.ஜெயலட்சுமி, ஷனிமோல் உஸ்மான், பிந்து கிருஷ்ணன், பாஜக தலைவர் ஷோபா சுரேந்திரன் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT