Last Updated : 03 May, 2021 12:02 PM

5  

Published : 03 May 2021 12:02 PM
Last Updated : 03 May 2021 12:02 PM

மே.வங்கத்தில் 60 ஆண்டுகள் ஆட்சி: தேர்தலில் ஒரு இடம் கிடைக்காமல் துடைத்து எறியப்பட்ட இடதுசாரிகள், காங்கிரஸ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | கோப்புப்படம்

கொல்கத்தா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட தலைமையான கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்கத்தில் மாறி,மாறி ஆட்சி செய்து ஏறக்குறைய இரு கட்சிகளும் 60 ஆண்டுகள் மாநிலத்தை ஆண்டுள்ளன.

ஆனால், நடந்த முடிந்த தேர்தலில் 292 தொகுதிகளி்ல் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல், மக்களால் துடைத்து எறியப்பட்டுள்ளார்கள்.

கேரளாவில் இரு கட்சிகளும் எதிரும்புதிராக இருந்து கொண்டு, மேற்கு வங்கத்தில் இரு கட்சிகளும் இணைந்து கைகோர்த்து இயல்புக்கு மாறாக கூட்டணி அமைத்ததை மே. வங்க மக்கள் ஏற்கவில்லை.

இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4.72 சதவீத வாக்குகளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 0.20 சதவீத வாக்குகளும் , சிபிஐ( எம்எல்) 0.03 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளன. பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி 2.94 சதவீதவாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

மாநிலத்தைக் கட்டி ஆண்ட இரு பெரும் கட்சிகளின் வாக்கு சதவீதம் இவ்வளவு மோசமாகச் சரிந்ததபின் இரு கட்சிகளும் அதை சுயபரிசோதனை செய்வது அவசியம்.

தேர்தலின்போது சிறுபான்மை வாக்குகளை ஈர்ப்பதற்காக புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற கூட்டணி (ஐஎஸ்எப்) கட்சியுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ், சிபிஎம் தேர்தலைச் சந்தித்தும் அது எந்த விதத்திலும் உதவவில்லை.

இந்தத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 38 சதவீதம் வாக்குகளைப் பெற்ற நிலையில் இந்ததேர்தலில் 43.3 சதவீதமாக உயர்த்தி்க் கொண்டது.

மக்களவைத் தேர்தலில் 18 இடங்களில் வென்று 42 சதவீதம் வாக்கு சதவீதத்தை வைத்திருந்த பாஜக இந்தத் தேர்தலில் 2 சதவீத வாக்கு எண்ணிக்கையை இழந்து 40ஆகக் குறைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி 47.97சதவீத வாக்குகளையும், பாஜக 38.09 வாக்குகளையும் பெற்றுள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரைவத் தேர்தலில் 92 இடங்களில் போட்டியி்ட்ட காங்கிரஸ் கட்சி 44 இடங்களைக் கைப்பற்றி 2-ம் இடம் பெற்று கவுரவத்தோடு இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 148 இடங்களி்ல் போட்டியிட்டு 26 இடங்களில் வென்று 3-ம் இடம் பெற்றிருந்தது.

ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சி 91 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி 137 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால், இந்த மூன்று கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

இந்த மூன்று கட்சிகளையும் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளதுள்ளார்கள். கடந்த 2016ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 32 இடங்களில் வென்று 3-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், மக்களவைத் தேர்தலி்ல் 42 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாதபோதே மக்கள் புறக்கணித்துவிட்டதை உணரமுடிந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன.

கடந்த 1947ம் ஆண்டு பிரபுல்லா சந்திரகோஷ், 1950ம் ஆண்டு பிதன் சந்திர ராய் காலத்திலிருந்து மே.வங்க மாநிலத்தை ஏறக்குறைய 20 ஆண்டுகள்வரை காங்கிரஸ் கட்சிதான் ஆண்டது.

அதன்பின் கடந்த 1977 முதல் 2011ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணிதான் ஆட்சியில் இருந்தது. மாநிலத்தைக் கட்டி ஆண்ட இரு பெரும் கட்சிகளும் மாநில அரசியலில் இருந்து இந்த தேர்தலில் மக்களால் துடைத்து எறியப்பட்டுள்ளன. இரு கட்சிகளின் சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை, புறக்கணித்துள்ளது தெரியவந்துள்ளது.

இரு மாபெரும் கட்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க நினைத்திருந்தால், நிச்சயம் ஒரு இடத்திலாவது இரு கட்சிகளும் வென்றிருக்கும். ஆனால், இன்று சட்டப்பேரவையில்கூட இரு கட்சிகளின் குரல்கள் ஒலிக்க முடியாதவகையில், மக்களால் இரு கட்சிகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜேஎன்யு மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஆஷி கோஷ், திப்சித்தா தார், மீனாட்சி முகர்ஜி, கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சலீம், சுஜன் சக்ரவர்த்தி, அசோக் பட்டாச்சார்யா என பலர் களமிறங்கியும் மண்ணைக் கவ்வியுள்ளனர்.

குறிப்பாக இந்தத் தேர்தலுக்காக புதிதாகத் தொடங்கப்பட்ட முஸ்லிம் மதகுரு அப்பாஸ் சித்திக் தலைமையிலான ஐஎஸ்எப் கட்சியுடன் இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தன. சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஈர்க்கலாம் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த கூட்டணி, எந்தவிதத்திலும் வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை.

மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்த வாக்கு சதவீதத்தையும், வாக்களார்களையும் கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் பாஜக வாரிச்சுருட்டிச் சென்று 18 இடங்களில் அபாரமாக வென்றது. அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் விழித்திருக்கவேண்டும்.

ஆனால், தங்கள் சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் மாநிலத்துக்கு ஏற்றார்போல், உதிர்த்துவிட்டு புதுப்பிக்காமல் இருந்ததன் விளைவு, இந்தத் தேர்தலில் இரு கட்சிகளும் மே.வங்கத்தில் தடம்தெரியாமல் மக்களால் துடைத்தெறியப்பட்டுள்ளார்கள்.

இனியும் இரு கட்சிகளும் தங்களின் சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் மே.வங்க மாநில மக்களுக்கு ஏற்றார்போல் மாற்றிஅமைக்காவிட்டால், அடுத்த தேர்தலுக்குள் மக்கள் தங்கள் மனதிலிருந்து இரு கட்சிகளின் பெயர்களையும் நீக்கினாலும் வியப்பில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x