Published : 03 May 2021 11:29 AM
Last Updated : 03 May 2021 11:29 AM
மேற்கு வங்க மாநிலத்தில் தீவிரம் காட்டிய பாஜகவை தோல்வியுறச் செய்துள்ளார் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பாணர்ஜி. இவர் மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்ததன் பின்னணியில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இம்மாநிலத்தின் கடந்த தேர்தலுக்கு வெகு முன்பாகவே பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கத் தீவிரம் காட்டி வந்தது. மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தனது நேரடி கண்காணிப்பை இங்கு செலுத்தி வந்தார்.
எந்த மாநிலங்களிலும் இல்லாதவகையில் முதன்முறையாக பிரதமர் நரேந்தர மோடி அதிகமான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அவரது கட்சியின் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும்பாலான முக்கியத் தலைவர்களும் இங்கு களம் இறக்கப்பட்டனர்.
இதனால், அங்கு மீண்டும் மம்தாவிற்கு முதல்வராகும் வாய்ப்பு கேள்வி குறி எனப் பேசப்பட்டது. திரிணமூல் காங்கிரஸில் இதை ஒரே தலைவராகவும், தனிப் பெண்ணாகவும் நின்று சமாளித்திருக்கிறார் மம்தா.
இதன் பின்னணியில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது தெரிந்துள்ளது. தம் பிரச்சாரங்களில் மம்தா மீது அளவிற்கு அதிகமான கடும் விமர்சனங்களை பாஜகவினர் முன்வைத்தனர்.
‘தீதி(அக்கா)’ என்றழைக்கப்படும் மம்தாவை பிரதமர் நரேந்தர மோடியும் தன் மேடைகளில், தீதி...ஓ...தீதி...’ என ராகத்துடன் குறிப்பிட்டு கிண்டலடித்தார். துவக்கத்திலேயே தன் காலில் ஏற்பட்ட முறிவால் மாவு கட்டு போட்டுக் கொண்டு, சக்கர நாற்காலியில் சமாளித்தார் மம்தா.
இதற்கு பாஜகவினர் அவர் நந்திகிராமில் ஸ்கூட்டியில் சென்றபோது சறுக்கி விழுந்திருப்பார் என விமர்சித்தனர். தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்ட இதுபோன்ற விமர்சனங்களால் பொதுமக்களிடம் மம்தா மீது பரிதாபம் கிளம்பியது.
இது, மம்தாவை சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி செய்த பிரச்சாரத்தில் அதிகரித்தது. குறிப்பாக இது பெண் வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதை அதிரிக்க மம்தா, பாஜகவை விட அதிகமாக ஐம்பது பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்தார். இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளுக்கு உள்ள வலிமையை பாஜக மேற்கு வங்கத்திலும் தகர்க்க முயன்றது.
வங்காளி-இந்திக்கு இடையிலான போட்டி
இதற்கு பதிலடியாக மம்தா, தனது கட்சி மண்ணின் மைந்தர்களது எனவும், பாஜக வெளிமாநிலத்தை சேர்ந்ததாகவும் பிரச்சாரம் செய்தார். இது, முதன்முறையாக, பெங்காலி மற்றும் இந்திக்கு இடையிலான மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜகவால் ஆபத்து எனும் கருத்து முன்வைக்கப்பட்டது.
இதில் வெற்றிபெற மம்தா, ‘மேற்கு வங்கத்திற்கு அதன் மகளது ஆட்சியே தேவை’ எனும் கோஷத்தை முன் வைத்தார். இது, மேற்கு வங்கத்தில் அதிகரித்துவரும் இந்தி பேசும் மக்கள் மற்றும் வங்காளிகளுக்கு இடையிலான போட்டியாகவும் உருவெடுத்தது.
இந்த விவகாரத்தில், பாஜக தன் முதல்வர் வேட்பாளராக எவரையும் முன்னிறுத்தாததும் மம்தாவிற்கு சாதகமானது. தனது துவக்கம் முதல் இந்துக்களை ஒருங்கிணைக்கச் செய்து வரும் நடவடிக்கையை பாஜக இங்கும் தொடர்ந்தது.
மம்தாவை மீண்டும் ஆதரித்த முஸ்லிம்கள்
இந்துக்கள் எனும் பெயரில், மேற்கு வங்கத்தின் தலித், ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை ஒன்றிணைக்கவும் பாஜக முயன்றது. தேர்தலுக்கு இடையே இதன் எல்லையிலுள்ள வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்கச் சென்றிருந்தார் பிரதமர் மோடி.
அங்கு பிரதமர் மோடி, மத்துவா சமூகத்தின் கோயிலுக்குச் சென்றது சர்ச்சையானது. இதன்மூலம், மேற்கு வங்க மாநிலத்திலும் அதிகம் இருந்த மத்துவா சமூகத்தினரை முழுவதுமாக பாஜகவால் கவர முடியாமல் போனது.
இந்துத்துவா பிரச்சாரம் மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் முப்பது சதவிகித முஸ்லிம்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. இவர்கள் ஏற்கெனவே குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு ஆகியவற்றில் அதிருப்தியுடன் உள்ளனர்.
இதனால், அங்குள்ள சிறுபான்மை முஸ்லிம்களும் அதிக அளவில் மம்தாவிற்கு வாக்குகளை அளித்தது வெற்றிக்கானக் காரணமானது. மம்தாவின் வாக்குகளை பிரிக்க புதிதாக உருவான இந்திய மதசார்பற்ற முன்னணி(ஐஎஸ்எப்) எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸை தொடர்ந்து சுமார் 34 வருடங்கள் ஆட்சி புரிந்த இடதுசாரிகளை அதன் வாக்காளர்கள் பொருட்டாக எண்ணவில்லை. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸும், ஐஎஸ்எப் இணைந்தது பலன் தரவில்லை.
மத்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை
தொடக்கம் முதலாகவே இது, திரிணமூல் மற்றும் பாஜகவிற்கு இடையிலான இருமுனைப்போட்டியாகவே இருந்தது. மேலும், மத்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மேற்கு வங்க தேர்தலின் துவக்கம் முதல் மத்திய அரசுக்கு ஆதரவாகவே பார்க்கப்பட்டது.
உதாரணமாக, முதன்முறையாக அதிக அளவிலான எட்டு கட்ட தேர்தலும், மத்திய அரசின் கீழ் செயல்படும் பாதுகாப்பு படைகளின் துப்பாக்கி சூட்டில் 5 உயிர்கள் பலியும் கூறப்பட்டது.
இந்தமுறை தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் அதிக அளவிலான மாநில அதிகாரிகள் பணி மாற்றலுக்கு உள்ளாகினர். கடைசி மூன்று கட்ட வாக்குப்பதிவை ஒன்றிணைக்க மம்தா கூறியதை தேர்தல் ஆணையம் ஏற்காததும் மத்திய அரசிற்கு சாதகமாகப் பார்க்கப்பட்டது.
இதுபோன்ற விவகாரங்களுடன் மத்திய அமலாக்கத்துறையின் சோதனை நடவடிக்கைகளையும் பாஜகவிற்கு எதிராக முன்வைத்தார் மம்தா. இதனால், மக்களவை தேர்தலுக்கு இணையாகப் பேசப்பட்ட மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா மூன்றாவது முறையாக வென்று ’ஹாட்ரிக்’ அடித்து விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT