Published : 02 May 2021 09:04 PM
Last Updated : 02 May 2021 09:04 PM
மேற்குவங்கத்தில் கிடைத் தேர்தல் வெற்றியின் மூலம் இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தி்ன் அறிவிப்பின்படி 216 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது, பாஜக 73 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மிகப்ெபரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ள மம்தா பானர்ஜிக்கு முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தேர்தல் வெற்றி குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் கிடைத்த தேர்தல் வெற்றியின் மூலம் இந்த தேசம் காப்பாற்றப்பட்டுள்ளது. இது என்னுடைய வெற்றி அல்ல, மக்களின் வெற்றி, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இந்தியாவை இன்று மே.வங்கம்தான் காப்பாற்றியிருக்கிறது.
மத்திய அரசு, அதன் படைகள், பரிவாரங்கள் அனைத்துக்கும் எதிராக போரிட்டு இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி மனிதநேயத்தை காப்பாற்றியிருக்கிறது .
இப்போது நான் நலமாக இருக்கிறேன். சில நாட்களுக்குமுன் நான் உங்களிடம் கூறியதுபோல், நான் நலமடைந்துவிட்டேன், விரைவில் காலில் போடப்பட்டுள்ள கட்டை நீக்குவேன். தேர்தலுக்குமுன் நான் கூறியதுபோல், மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.
நாட்டில் உள்ள ஒவ்வொருஇந்தியருக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
140 கோடி மக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடிதான் செலவாக உள்ளது. என்னுடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், மகாத்மா காந்தி சிலை முன் நான் போராட்டம் நடத்துவேன்.
இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திரிணமூல் காங்கிரஸ் அடைந்தாலும், பதவி ஏற்புவிழா மிகவும் எளிமையாகவே நடக்கும். இப்போது மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில்தான் கவனம் செலுத்துவேன். தேர்தல் வெற்றியைக் கொண்டாட நேரமில்லை. கரோனா தொற்றுமுடியட்டும், பிரிகேட் பரேட் மைதானத்தில் பேரணிக்கு ஏற்பாடு செய்வோம்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரட்டை எஞ்சின் அரசு என்று பேசினார்கள். ஆனால், எங்கள் கட்சி இந்த தேர்தலில் இரட்டை சதம் அடித்துள்ளது. 221 இடங்களை நான் குறிவைத்தேன், அந்த இலக்கை நெருங்கிவிட்டோம். இதற்கு நான் மக்களுக்கு நன்றி தெரிவி்க்கிறேன்.
இவ்வளவு மோசமாக தேர்தல் ஆணையம் தேர்தலை எங்கும் நடத்தியது இல்லை. எங்களை மிகுந்த பாரபட்சத்துடன் தேர்தல் ஆணையம் நடத்தியது. நந்திகிராம் தொகுதியில் சில முறைகேடுகள் நடந்துள்ளன. அது குறித்து நான் நீதிமன்றம் செல்வேன்.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். நந்திகிராமில் மக்கள் அளித்த தீர்ப்பை நான் மதிக்கிறேன். நந்திகிராம் மக்கள் முடிவு எடுக்கட்டும். எந்த முடிவாக இருந்தாலும் இன்று நான் அதை ஏற்கிறேன். என் தேர்தல் வெற்றியில் ஏதோ முறைகேடு நடந்துள்ளதாக உணர்கிறேன். அதனால்தான் வெற்றி திடீரென மாற்றப்பட்டது.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT