Published : 02 May 2021 07:35 PM
Last Updated : 02 May 2021 07:35 PM
மக்கள் கரோனா வைரஸின் பிடியில் சிக்கி இருக்கும்போது தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவதற்கு இது உகந்த நேரம் இல்லை. இது மக்களின் வெற்றிதான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் நடந்த 140 தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தலைமையிலான எல்டிஎப் கூட்டணி 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தர்மடம் தொகுதியில் போட்டியி்ட்ட முதல்வர் பினராயி விஜயன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றிக்குப்பின் முதல்வர் பினராயி விஜயன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த தேர்தலில் எங்களுக்குக் கிடைத்துள்ளது மிகப்பெரிய வெற்றிதான் என்றாலும், மக்கள் கரோனா பிடியில் சிக்கியிருக்கும் போது, வெற்றியைக் கொண்டாட இது சரியான நேரம் இல்லை. தேர்தல் வெற்றி குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.
நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தோம், மக்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்தார்கள். இது மக்களுக்கான, மக்களுடைய வெற்றி. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் அதிகமான இடங்களி்ல் வென்றுள்ளோம்.
கேரளாவில் மிகப்பெரிய அரசியல் போர் நடந்ததை மக்கள் அறிந்தார்கள். இடதுசாரிகளால் மட்டும்தான் ஏதாவது செய்ய முடியும் என நம்பி எங்களை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளார்கள். கடந்த 5 ஆண்டுகால எங்கள் ஆட்சியை மக்கள் அங்கீகரித்துள்ளார்கள், மதித்துள்ளார்கள்.
பேரிடர்கள் வரும்போது, இயற்கை சீற்றங்கள், பெருந்தொற்று வரும்போது ஒரு அரசு நமக்கு பக்கபலமாக இருக்கிறது, இருக்கவேண்டும் என்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். பல்வேறு பிரச்சினைகளை, சிக்கல்களை இடதுசாரி அரசு எவ்வாறு கையாண்டது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற தொடர்ந்து இடதுசாரிகள் அரசு ஆட்சியில் இருக்க மக்கள் வாய்ப்பளித்துள்ளார்கள்.
மக்கள் மதச்சார்பின்மையைக் காக்க வாக்களித்துள்ளார்கள், வகுப்புவாத சக்திகளுடன் சமரசம் செய்து கொள்ளவில்லை. மதரீதியான தீவிரப் பற்றாளர்கள், மாநிலத்தை இரண்டாக துண்டாட முயன்றார்கள். ஆனால் அதை அரசு அனுமதிக்கவில்லை, மக்களும் அதை ஏற்கவில்லை.
மாநிலத்தில் அதிகமான இடங்களை வெல்லப்போகிறோம் என்ற தோற்றத்தை மக்களிடம் பாஜக உருவாக்கியது. ஆனால் ஏற்கெனவே கூறியதுபோல், பாஜக கணக்கை இந்த தேர்தலில் முடித்துவிடுவோம் என்றோம் அதை செய்துவிட்டோம். மற்ற மாநிலங்களில் பாஜக செய்யும் செயல்களைப் போல் செய்வதற்கு கேரளா ஏற்ற மாநிலம் அல்ல. தேர்தல் முடிவு அதை நிரூபித்துவிட்டது
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT