Published : 02 May 2021 05:56 PM
Last Updated : 02 May 2021 05:56 PM
மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வெற்றி பெற செய்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை 1,200வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேற்குவங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது . நந்திகிராமில் கடந்த 2007ல் ரசாயன ஆலைக்கு எதிரான நந்திகிராம் போராட்டத்தை முன்னெடுத்தவர் சுவேந்து அதிகாரி. இதனால், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு சுவேந்து அதிகாரி கடும் சவாலாக இருந்தார்.
மேற்குவங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ், பாஜகவை விடவும் இரண்டு மடங்கு கூடுதல் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
பிற்பகல் நிலவரப்படி வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 209 இடங்களிலும், பாஜக 81 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கத்தில் பின்தங்கினார். எனினும் தற்போது நிலைமை மாறியது. முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை 1,200வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சுவேந்து அதிகாரி முன்பு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் அமைச்சராக இருந்தவர். பின்னர் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வெற்றி பெற செய்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. கரோனா காலத்தில் யாரும் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்த வேண்டாம். வீட்டிலேயே தங்கியிருங்கள். விரைவில் ஊடகங்கள் வாயிலாக உங்களை சந்திக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT