Published : 02 May 2021 05:36 PM
Last Updated : 02 May 2021 05:36 PM

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து போட்டியிட்ட எம்எல்ஏக்கள் பலர் தோல்வி முகம்

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி | கோப்புப்படம்

கொல்கத்தா


மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து பல எம்எல்ஏக்கள், தற்போதைய தேர்தலில் தோல்வியை நோக்கி சரி்ந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து முதல்வர் மம்தா அரசில் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் என பலர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சென்றனர்.

ஏறக்குறைய பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என 3 கட்சிகளிலும் இருந்து 34 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்து சீட் பெற்று இந்தத் தேர்தலில் போட்டியி்ட்டனர். இன்று நடந்துவரும் வாக்கு எண்ணிக்கையில் கட்சி மாறி பாஜகவில் சேர்ந்து சீட் பெற்று தேர்தலில் போட்டியி்ட்ட பலர் தோல்விமுகத்தில் உள்ளனர்.

அதிலும் திரிணமூல் காங்கிரஸில் முதல்வர் மம்தாவுக்கு விசுவாசமாக இருப்பதுபோல் காண்பித்து, பின்னர் பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரி, ருத்ரானில் கோஷ், ரஜிப் பானர்ஜி என பலரும் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர்.

இதில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு, 3 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்தார்.

மம்தா பானர்ஜி அரசில் கேபினெட் அமைச்சராக இருந்த ரஜிப் பானர்ஜி, கடந்த ஜனவரி மாதம் பாஜகவில் சேர்ந்தார். இந்த தேர்தலில் டோம்ஜுர் தொகுதியில் போட்டியி்ட்ட ரஜீவ் பானர்ஜி, திரிணமூல் வேட்பாளர் கல்யாண் கோஷைவிட பின்தங்கியுள்ளார்.

சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி

பாபானிபூரில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சுவேன்தீப் சாட்டர்ஜியை எதிர்த்து போட்டியி்ட்ட ருத்ரானில் கோஷ் 10 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார். திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ருத்ரானில் கோஷுக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். ஆனால் ருத்ரானில் கோஷும் தோல்வியின் பிடியில் உள்ளார்.

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகியவர்களில் 12பேர் தேர்தலில் போட்டியிட பாஜகவிடம் வாய்ப்புப் பெற்றனர்.அதில் பெரும்பாலானோர் தற்போது தோல்வியின்பிடியில் சிக்கியுள்ளனர்.

பாலே தொகுதியில் போட்டியிட்ட பைஷாலி டால்மியா, டைமண்ட்ஹார்பர் தொகுதியில் போட்டியி்டட தீபக் குமார் ஹால்தர், உத்தர்பராவில் போட்டியிட்ட பிரபிர் கோஷல், கால்னா தொகுதியில் போட்டியிட்ட பி்ஸ்வஜித் குண்ட், சிங்கூரில் போட்டியிட்ட ரவிந்திரநாத் பட்டாச்சார்யா ஆகியோர் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவி்ல இணைந்து தேர்தலில் வாய்ப்பு பெற்றனர்.இவர்கள் அனைவருமே தோற்கும் நிலையில் உள்ளனர்.

இதில் ரஜீவ் பானர்ஜி, பிரபிர் கோஷல், பைஷாலி டால்மியா ஆகியோர் கொல்கத்தாவில் இருந்து டெல்லி சென்று அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்து, தேர்தலில் சீட் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x