Published : 02 May 2021 04:33 PM
Last Updated : 02 May 2021 04:33 PM
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நடந்த 140 தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தலைமையிலான எல்டிஎப் கூட்டணி 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.
கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறி, மாறி ஆட்சியில் அமர்ந்ததேத் தவிர தொடர்ந்து இரு முறை ஆட்சியில் அமர மக்கள் வாய்ப்பளிக்கவில்லை
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நிபா வைரஸ், மழை வெள்ளம், சபரிமலை விவகாரம், ஒக்கி புயல், கரோனா வைரஸ் என பலவிதமான சவால்களை வெற்றிகரமாகச் சமாளித்து வெற்றி கண்டது. இதை அங்கீகரிக்கும் வகையில் தொடர்ந்து 2-வது முறையாக முதல்முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைத் தக்கவைக்கிறது.
கேரள மக்களின் இந்த நம்பிக்கைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நன்றி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட யெச்சூரி பேசியதாவது:
பெருந்தொற்று உள்ளிட்ட மக்கள் சந்தித்த பல்வேறு சவால்களை சிறப்பாகக் கையாண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு மீது முன்னெப்பதும் இல்லாத வகையில் நம்பிக்கை வைத்து மீண்டும் ஆட்சியில் அமரவைத்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
கரோனா பெருந்தொற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு உலகத்துக்கே ஒரு முன்மாதிரியாக கேரள மாநிலம், கேரள மாடலாக இருந்தது.
இ்ப்போதுள்ள நேரத்தில் இந்த தேசமும், மாநிலமும் இரு ஆபத்தான விஷயங்களை சந்திக்கின்றன. கரோனா பெருந்தொற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்சினைகள், மற்றொன்று அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, குடியரசு இந்தியா ஆகியவற்றை பாதுகாப்பதும், கட்டிக்காப்பதுமாகும்.
இந்த இரு சவால்களுக்கும் தகுதியானதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி இருக்கும். எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் கேரள மக்கள் தொடர்ந்து ஆதரவாக இருந்து எங்களை இன்னும் வலிமைப்படுத்துவார்கள்.
கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இந்த தேசத்தின் மக்கள் அனைவரும் இந்த பெருந்தொற்றை சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எதிர்த்துப்போராடி இந்த வைரஸைத் தோற்கடித்து, அனைவருக்குமான சிறந்த இந்தியாவையும், கேரளாவையும் அளி்க்க வேண்டும்.
இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT