Published : 02 May 2021 03:18 PM
Last Updated : 02 May 2021 03:18 PM
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி பெறும் சூழல் உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, எனினும் தேர்தல் வியூக நிபுணர் பணியில் இருந்து விலகுகிறேன் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்துக் கொடுத்தது.
பிரசாந்த் கிஷோர் முன்பு ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “குறிப்பிட்ட சில ஆதரவு ஊடகங்களின் அனைத்துவிதமான பிரச்சாரங்களால் பாஜக வலுவாகக் காண்பிக்கப்படுகிறது.
உண்மையில், மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப் போகிறது. ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்கத்தில் பாஜகதான் வெற்றி பெறும் எனப் பேசியதாக மூத்த தலைவர் அமித் மால்வியா ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘ மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீது மக்களிடையே கடும் அதிருப்தி உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மீது அதிருப்தியில்லை. திரிணமூல் காங்கிரஸ் நடத்திய சர்வேயில் கூட பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்தத் தேர்தலில் 3 விஷயங்கள் பாஜகவுக்குச் சாதகமாக உள்ளன. நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீதான 10 ஆண்டு அதிருப்தி, ஆளும் கட்சியின் சிறுபான்மை ஆதரவுப் போக்கு ஆகியவை முக்கியமானவை’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்துக் கொடுத்த மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி பெறும் நிலை உள்ளது.
இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
''மேற்கு வங்கத் தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என்ற எண்ணம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், நான் தொடக்கத்தில் இருந்தே கூறிவந்தேன். அதுதான் நடந்துள்ளது. எல்லாத் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற்று விடாது.
பிரதமர் மோடியின் பிரபலத்தை வைத்துக்கொண்டே எல்லாத தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாது. இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழகத்திலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது. நான் கூறியபடியே பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டவில்லை.
இருந்தாலும் நான் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போகிறேன். 9 ஆண்டுகள் இந்தப் பணியைச் செய்துவிட்டேன். போதும், இனிமேல் நான் எனது குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிடுகிறேன். எனது ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள்''.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT